

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்த இளையரசனேந்தல் பிரிக்கா கடந்த 2008-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. வருவாய்த்துறை காவல்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்துடன் இணைக்கப்பட்ட நிலையில், இளையரசனேந்தல் பிரிக்காவுக்கு உட்பட்ட 12 வருவாய் கிராமங்கள் மட்டும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பிரிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் கடந்த டிசம்பர் இறுதியில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் கூட நடத்தப்படவில்லை.
இளையரசனேந்தல் பிரிக்காவை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வலியுறுத்தி விவசாயிகள், கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் வார்டு மறுவரையறை பட்டியலில் உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இளையரசனேந்தல் பிரிக்காவுக்கு உட்பட்ட 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதனை கண்டித்தும், இளையரசனேந்தல் பிரிக்காவுக்கு உட்பட்ட இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி, நக்கலமுதன்பட்டி, பிள்ளையார்நத்தம், புளியங்குளம், சித்திரம்பட்டி, ஜமீன்தேவர்குளம், பிச்சைதலைவன்பட்டி, வடக்குப்பட்டி, முக்கூட்டுமலை, வெங்கடாசலபுரம் ஆகிய 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி எல்லைக்குள் கொண்டு வர வேண்டும். இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கம் மற்றும் இளையரசனேந்தல் பிரிக்கா உரிமை மீட்புக்குழு சார்பில் நேற்று கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
போராட்டத்தில் தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ். ரெங்கநாயகலு, மாநில பொதுச் செயலாளர் பி. பரமேஸ்வரன், இளையரசனேந்தல் பிரிக்கா உரிமை மீட்புக்குழு வழக்கறிஞர் அய்யலுசாமி, விவசாயி தாமோதர கண்ணன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர் ஜெபராஜ், காவல் ஆய்வாளர்கள் சுதேசன், ஐயப்பன், பத்மாவதி தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் அரை மணி நேரம் நடந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ரெங்கநாயகலு கூறும்போது, இளையரசனேந்தல் பிரிக்காவுக்கு உட்பட்ட 12 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் தங்கள் யூனியன் சார்ந்த வேலைகளுக்கு குருவிகுளம் செல்ல வேண்டி இருப்பதாலும், வருவாய் தொடர்பாக கோவில்பட்டிக்கு செல்லவேண்டி உள்ளதாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டங்கள் நடைபெறும், என்றார் அவர்.