

சிஏஏவுக்கு எதிராக முற்றுகைப் போராட்டம் தீவிரமாக நடந்துவரும் சூழலில், முதல்வர் பேரவைக் கூட்டத்தின் இடையே திடீரென தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 4-ம் தேதி தொடங்கியது. பின்னர் பிப்.14 அன்று துணை முதல்வர் ஓபிஎஸ் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் 14-ம் தேதி மாலை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்களுக்கு எதிராக போலீஸ் தடியடி நடத்தியதாக பிரச்சினை எழுந்தது. தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து 5-வது நாளாகப் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில் சட்டப்பேரவையிலும் இது எதிரொலித்தது. சட்டப்பேரவையில் இஸ்லாமியர்கள் போராட்டத்தை திமுக தூண்டிவிடுவதாக முதல்வர் குற்றம் சாட்டியதற்கு இஸ்லாமிய இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன. ''சிஏஏ போராட்டத்தை முதல்வர் மத்திய அரசு பார்ப்பது போன்று பார்க்கிறார். அதிகாரிகள் எழுதிக்கொடுப்பதைப் படிக்கிறார்'' என முஸ்லிம் மக்கள் குற்றம் சாட்டினர்.
முதல்வர் எடப்பாடி நேற்று சட்டப்பேரவையில் திமுகவுக்கு எதிராகப் பேசும்போது சிஏஏவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளாரா? எனக் காட்டுங்கள் என ஆவேசமாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்கள் போராட்டம் வலுத்து வரும் நிலையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இன்று முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது. ஆனால் தடையை மீறி முற்றுகைப் போராட்டம் நடக்கிறது. இதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும்போதே இடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறைக்குச் சென்றார். உடன் தலைமைச் செயலாளரையும் அழைத்துச் சென்ற அவர் அங்கு ஆலோசனை நடத்தினார்.
முற்றுகைப் போராட்டம், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்ட முடிவு, அடுத்தகட்ட நகர்வு போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசனை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.