

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகரில் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த முற்றுகைப் போராட்டம் பாதிவழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் கோரி அனைத்து மாவட்டங்களிலும் இஸ்லாமிய அமைப்புகள் இன்று போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதன் ஒருபகுதியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இஸ்லாமிய அமைப்பினரை மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
முன்னதாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கையில் தேசிய கொடியுடன் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.