Published : 19 Feb 2020 11:50 AM
Last Updated : 19 Feb 2020 11:50 AM

சிஏஏ-வுக்கு எதிராக நெல்லை, மதுரையில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியனவற்றை எதிர்த்து மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களிலும் முஸ்லிம் அமைப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன.

சிஏஏவுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி பிப்.19 சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்தை அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்தன.

அதன்படி, தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியனவற்றை எதிர்த்து தடையை மீறி தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் பேரணி நடத்தி வருகிறது.

இந்நிலையில், மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களிலும் முஸ்லிம் அமைப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன.

மதுரையில், ஆட்சியர் அலுவலகம் நோக்கி, மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை முற்றுகைப் போராட்டம் நடத்துகிறது. இதற்கான பேரணியில் நோ என்.ஆர்.சி, நோ சிஏஏ, நோ என்பிஆர் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி வரப்பட்டன. அத்துடன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் பதாகைகளும் கொண்டுவரப்பட்டன.

விமான நிலையத்தில் பாதுகாப்பு..

மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியிய அமைப்புகள் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் ஆய்வாளர் சார்மி வைஸ்லி தலைமையில்
23 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டகாரர்கள் மதுரை விமான நிலையத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்திரவின் பேரில் போலீஸார் பாதுகாப்புப் பணிகயில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் நெல்லையில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி பேரணியில் ஈடுபட்டவர்கள் முழங்கினர்.

நெல்லையில் கணிசமான அளவு பெண்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்க அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.ஸ்ரீநிவாசகன், அ.அருள்தாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x