Published : 19 Feb 2020 09:28 AM
Last Updated : 19 Feb 2020 09:28 AM

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுமா?

காரைக்கால் மாவட்டத்தில் விவசாயி களுக்கான அடையாள அட்டையை விரைந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தின் நெற்களஞ்சியமாக விளங்கக் கூடிய காரைக்கால் மாவட்டத்தில் முன்பு 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, 4,800 ஹெக்டேர் பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சொந்த நிலம் உள்ளோர், குத்தகைதாரர் என 5 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். காவிரி கடைமடை பகுதியான காரைக்கால் மாவட்டத்தில் பெரிதும் காவிரி நீரையும், பருவ மழையையும் நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. சில பகுதிகளில் ஆழ்குழாய் நீர் பாசனத்தின் மூலமும் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், வேளாண் நிலப்பரப்பு மேலும் குறை யாமல் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க விவசாயிகளுக்கான அடையாள அட்டை அவசியம் என இப்பகுதி விவசாயிகள் கருதுகின்றனர்.

விவசாயிகளுக்கான வேளாண் இடுபொருட்களை மானிய விலையில் வழங்கி வந்த அரசு சார் நிறுவனமான பாசிக் நிறுவனம், தற்போது செயலற்ற நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை தனியார் நிறுவனங்களில் வாங்கி, அதற்குரிய சான்றுகளை வேளாண்துறையிடம் சமர்ப்பித்து, பின்னர் மானியத் தொகையை பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், விவசாயம் செய்பவர்களுக்கு மட்டுமே வங்கிகளில் குறைந்த வட்டியிலான விவசாய நகைக் கடன் தரப்படுகிறது. இதுபோன்ற சூழலில் ஒரு விவசாயிக்கு அடையாள அட்டை அவசியமாகிறது.

இதன்காரணமாக விவசாயி களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகி றது.

காரைக்காலில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் தலைமையிலான விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் இது தொடர்பாக விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். அப்போது, குறிப்பிட்ட காலத்துக்குள் அடையாள அட்டைகள் கொடுக்கப்படும் என அந்தக் கூட்டங்களில் அதிகாரிகளால் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை.

இது குறித்து வரிச்சிக்குடி வடக்கு பாசனதாரர்கள் சங்கத் தலைவர் பேராசிரியர் பி.சுப்பராயன் கூறியது: முன்பு வங்கிகளில் விவசாயி அல்லாத மற்றவர்களும் விவசாய நகைக் கடன் பெற்று வந்தனர். தற்போது உண்மையான விவசாயிகளுக்கு மட்டுமே விவசாய நகைக் கடன் வழங்கப்படுகிறது. அதனால், அடையாள அட்டை இருந்தால் நகைக் கடன் மற்றும் வேளாண் தொழில்நுட்ப இயந்திரங்கள் வாங்குவதற்கன கடன்கள் பெற விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும், அடையாள அட்டை இருந்தால், வேளாண் துறையின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத் திட்ட உதவிகள், மானிய உதவிகளைப் பெறுவது எளிதாக இருக்கும். ஒவ்வொரு முறையும் உரிய சான்றுகள், ஆவணங்களை பெற வேண்டிய அவசியம் இருக் காது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் அதிக நாட்டத்துடன் விவசாயத்தில் ஈடுபடுவர்.

ஒவ்வொரு தொழிலில் உள்ளோருக்கும் ஒரு அடையாள அட்டை இருக்கும் நிலையில், நாட்டின் முதுகெலும்பான விவசாயி களுக்கும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இருப்பது அவசியம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே அடையாள அட்டைக்கு தேவையான விவரங்கள் விவசாயிகளிடமிருந்து வேளாண் துறையால் பெறப்பட்டன. ஆனால், இதுவரை அடையாள அட்டை வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றார்.

இது குறித்து கூடுதல் வேளாண் இயக்குநர்(பொ) ஜெ.செந்தில்குமார் கூறியது: விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் பெரும்பாலும் முடிந்து விட்டன. வரும் சம்பா பருவத்துக்குள் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிடும். முதற்கட்டமாக சொந்த நிலம் உள்ள விவசாயிகளுக்கும், அடுத்த கட்டமாக குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் உரிய விதிமுறைகளின் அடிப்ப டையில் அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். வீ.தமிழன்பன்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x