

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலக மக்களை காக்கும் நோக்கில் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஜூரஹரேஸ்வரர் கோயிலில் சிவனடியார்கள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபாடு நடத்தினர்.
திருஞானசம்பந்தர் 7-ம் நூற்றாண்டில் யாத்திரை சென்றபோதும், யாத்திரை முடிந்து திரும்பியபோதும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வழியாக சென்றுள்ளார். அப்போது அவர் தங்கியிருந்த இடம் திருச்செங்கோடு தேரடி தெருவில் உள்ளது. யாத்திரை முடிந்து திருஞானசம்பந்தர் திருச்செங்கோடு வந்தபோது மக்கள் கடுமையான குளிர் ஜூரத்தால் (காய்ச்சல்) பாதிக்கப்பட்டிருந்தனர். பலர் உயிரிழந்துள்ளனர்.
இதைக் கண்ட திருஞானசம்பந்தர் திருநீலகண்டம் என்ற ஒரு பதிகத்தை பாடி குளிர் ஜுரத்திலிருந்து மக்களை காத்ததாக வரலாறு உள்ளது. திருஞானசம்பந்தர் திருநீலகண்டம் பதிகம் பாடிய தளத்தில் ஜுரஹரேஸ்வரர் என்ற கோயிலை எழுப்பி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மக்களுக்கு விஷ காய்ச்சல் தாக்கும் போது இந்த கோயிலில் அபிஷேகம் செய்து மிளகு ரசம் சாதத்தை உண்டால் காய்ச்சல் நீங்கும் என்பது ஐதீகம். தற்போது சீன மக்கள் மட்டுமன்றி உலகை அச்சுறுத்துவதாக கரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து உலக மக்களை காக்கும் நோக்கில் திருச்செங்கோடு ஜுரஹரேஸ்வரர் கோயிலில் செங்குன்றம் தமிழ்ச்சங்கம் சார்பில் திருநீலகண்டம் பதிகம் பாடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
செங்குன்றம் தமிழ் சங்கத்தலைவர் பொன்.கோவிந்தராஜ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தனியார் பள்ளி நிர்வாகி சிங்காரவேல் பதிகங்களை பாட தொடர்ந்து பக்தர்கள் திருநீலகண்டம் பதிகத்தைப் பாடி மனமுருக வேண்டினர். ஒரு பதிகம் என்பது 10 பாடல்களை கொண்டது. இந்த பதிகத்தில் 7-வது பாடல் கிடைக்கப் பெறாத நிலையில் 9 பாடல்களை பாடி வழிபாடு நடத்தப்பட்டது.
தொடர்ந்து சுவாமி ஜுரஹரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மேலும், கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு மிளகு ரசம் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திருச்செங்கோடு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.