

கோவையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 237 பவுன் நகை, 3 கார்களை பறிமுதல் செய்தனர்.
கோவை துடியலூர் அருகேயுள்ள இடையர்பாளையம் லூனா நகரைச் சேர்ந்தவர் கனகராஜ்(57). கட்டிட ஒப்பந்ததாரர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது வீட்டுப் பூட்டை உடைத்த மர்மநபர்கள், 137 பவுன் நகை, வெள்ளிப் பொருட்கள், ரூ.15 லட்சம் தொகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மேலும் சில திருட்டுச் சம்பவங்கள் நடந்தன.
குற்றவாளிகளை பிடிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில், துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளிசுந்தரம் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி, சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த ராஜசேகர்(38), நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன்(34), திருநெல்வேலி சிந்துபூந்துறையைச் சேர்ந்த பாண்டித்துரை என்ற புலிப்பாண்டி(26), மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற பட்டரை சுரேஷ்(30), ஈரோடு மாவட்டம் வெப்படையைச் சேர்ந்த சுரேஷ் என்ற சுள்ளான் சுரேஷ்(31) ஆகிய 5 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 237 பவுன் நகை, 3 கார், 4 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக தனிப்படை யினர் கூறும்போது,‘‘ 5 நபர்களுக்கும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு உள்ளது. இவர்கள் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் கூட்டாக இணைந்து தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு உள்ளனர். காவலர்களிடம் சிக்காமல் இருக்க, கார்களில் வலம் வரும் இவர்கள், பகலில் கார்களில் சென்றபடி, பூட்டப்பட்டு இருக்கும் வீடுகளை நோட்டமிடுவர். இரவில் வந்து பூட்டை உடைத்து நகை, பணம், பொருட்களை திருடிச் செல்வர்.
துடியலூரில் 4 வீடுகள், ஈரோட்டில் ஒருவரது வீடு, ஒசூரில் ஒருவரது வீடு, கேரளாவில் ஒரு வீடு என சமீபத்திய மாதங்களில் மட்டும் 7 இடங்களில் திருடியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும். ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்’’ என்றனர்.