

ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொல்லும் சிறுத்தைகள் வனத் துறை வைத்த கூண்டுக்குள்சிக்காமல் சுற்றிதிரிவதால், மலையடிவார கிராமங்களைச் சேர்ந்தமக்கள் அச்சத்துக்குள்ளாகி யுள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் உள்ள மலையடிவாரக் கிராமங்களில், கடந்த இரு வாரங்களாக சிறுத்தைகள் நடமாடி வருகின்றன. சம்மரவள்ளிபுதூர், பெரிய தோட்டம், பெத்திக்குட்டை, கோவில்மேடு, தேங்கல்கரடு ஆகிய கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் நுழையும் சிறுத்தைகள், அங்குள்ள தோட்டங்களில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் ஆடு, மாடுகளை கொன்று விடுகின்றன. இரவு மட்டுமின்றி பகல் நேரங்களில்கூட சிறுத்தைகள் நடமாடுவதைக் கண்ட கிராம மக்கள் அச்சத்துக்கு உள்ளாகினர்.
இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடங்களை ஆய்வு செய்த வனத் துறையினர் சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, பெரியதோட்டம் மற்றும் சம்மரவள்ளிபுதூர் ஆகிய இரு கிராமங்களில் கூண்டுகளை வைத்தனர். அதில் நாய்களை கட்டி வைத்தனர். மாலை நேரத்தில் கூண்டின் அறைக்குள் அடைக்கப்படும் நாய்கள் விடிந்த பின்னர் திறந்து விடப்படும். ஆனால் கூண்டு வைத்து ஐந்து நாட்களுக்கு மேலாகியும் சிறுத்தைகள் சிக்கவில்லை.
கூண்டு வைக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றியே சிறுத்தைகள் தொடர்ந்து நடமாடி வருவதாகவும், இதனால் தங்களது விவசாயப் பணிக்காக தோட்டங்களுக்குச் செல்ல முடியவில்லை என்றும் வேதனைப்படுகின்றனர் இப்பகுதி மக்கள். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “சிறுத்தைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கூண்டுகள் வைத்தும் சிறுத்தைகள் அதில் நுழையாமல் இருப்பதால், அவற்றைப் பிடிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றனர்.