

நக்சல்கள் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில் தமிழக அரசின் முன்னாள் உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி திண்டுக்கல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி பொய்யாவெளி என்ற வனப்பகுதியில் 2008-ல் நக்சல்கள் ஆயுதப் பயிற்சி மேற்கொள்வதாகக் கிடைத்த தகவலின்பேரில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் தர்மபுரியைச் சேர்ந்த நவீன் பிரசாத்சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றவர்கள் தப்பியோடினர்.
இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடியவர்களில் ரஞ்சித், நீலமேகம், கண்ணன், பகத்சிங், லீமா ஜாய்ஸ் மேரி, செண்பக வல்லி, காளிதாஸ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மதுரை, திருச்சி, வேலூர் சிறைச் சாலைகளில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நக்சல்கள் கண்ணன், பகத்சிங், லீமா ஜாய்ஸ் மேரி, செண்பக வல்லி, காளிதாஸ் மற்றும் ஜாமீனில் உள்ள நீலமேகம், ரஞ்சித் ஆகிய 7 பேரும் நீதிபதி ஜமுனா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நக்சல் நவீன் பிரசாத் என்கவுன்ட்டர் தொடர்பாக, அப்போது தமிழகஉள்துறை செயலராக இருந்த நிரஞ்சன் மார்டி நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இவரை நக்சல்கள் தரப்பு வழக்கறிஞர் கண்ணப்பன் ஒரு மணிநேரம் குறுக்கு விசாரணை செய்தார்.
படைக்கலன் பிரிவு அதிகாரி ராஜனும் சாட்சியம் அளித்தார்.வழக்கு பிப்.25-க்கு தள்ளிவைக்கப்பட்டது.