

கடலூர் அருகே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கியுள்ள 12 பேரும் ஒரே தெருவைச் சேர்ந்த உறவினர்கள்; அதில் 6 பேர் சகோதரர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாக கூறி, அவர்களுக்கு கடலூர் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் இன்று (பிப். 19) ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த 12 பேரும் தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருவாய் ஆய்வாளர்கள், தொழிலாளர் நல ஆய்வாளர்கள், மற்றும் வணிகவரித் துறை உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் கடலூர் கிழக்கு ராமாபுரத்தில் கிழக்கு தெருவில் வசிக்கும் உறவினர்கள் ஆவர்.
மேலும் இந்த 12 பேரில், ஒரு குடும்பத்துக்கு 2 பேர் வீதம் என 3 குடும்பங்களைச் சேர்ந்த அண்ணன், தம்பிகள் 6 பேரும் அடங்குவர். மற்ற 6 பேரும் அதே தெருவைச் சேர்ந்த அவர்களின் நெருங்கிய உறவினர்கள் என்பதும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த 12 பேரும் பல லட்ச ரூபாய் கொடுத்து, குரூப் 2-க்கான வினாத்தாளை வாங்கி தேர்வு எழுதியதாகக் கூறப்படுகிறது.
2011-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாள் வெளியானது தொடர்பாக, அப்போதே கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டை சேர்ந்த தயாநிதி, பத்திரக்கோட்டையை சேர்ந்த தவமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது இந்த மோசடியில் சிக்கியுள்ள 12 பேரும் கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதை தற்காலிகமாக நிறுத்திவைத்திருப்பதாக கடலூர் சிபிசிஐடி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.