Published : 19 Feb 2020 07:39 AM
Last Updated : 19 Feb 2020 07:39 AM

தமிழகத்தில் ஒரே மாதத்தில் பன்றிக்காய்ச்சலால் 132 பேர் பாதிப்பு: சுகாதாரத் துறை தீவிர தடுப்பு நடவடிக்கை

தமிழகத்தில் ஒரே மாதத்தில் பன்றிக்காய்ச்சலால் 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த 2009, 2010-ம் ஆண்டுகளில் பன்றிக்காய்ச்சல் (ஏஎச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் கிருமி) தமிழகத்தில் தீவிரமாக காணப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அதன்பின் சுகாதாரத் துறைஎடுத்த நோய் தடுப்பு மற்றும்முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டின்தொடக்கத்திலேயே பன்றிக்காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசுமற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலின் தீவிரத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரோனா வைரஸுடன் சேர்த்து பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முயற்சியில் தமிழக சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து மத்திய சுகா தாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில், “இந்த ஆண்டில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை பன்றிக்காய்ச்சலால் 437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக தமிழகத்தில் இந்த ஒரே மாதத்தில் 132 பேர்பாதிக்கப்பட்டதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். அடுத்தபடியாக தெலங்கானாவில் 78 பேரும், கர்நாடகாவில் 74 பேரும், டெல்லியில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் 1,038 பேர் உட்பட நாடுமுழுவதும் 28,798 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்றிக்காய்ச்சல் ஒரு தொற்றுநோய் என்பதால், அந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் வெளியே வரும் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலம் வைரஸ் கிருமிகள் காற்றில் பரவுகிறது.

இந்த கிருமிகள் படிந்துள்ள கதவு, கைப்பிடி, நாற்காலி, மேசை,குளிர்சாதன பெட்டி போன்ற பல்வேறு பொருட்களை நாம் தொடும்போது, நம்முடைய கைகளில் கிருமி ஒட்டிக் கொள்கிறது.

அதன்பின் நாம் கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடும்போது நமக்கும் கிருமி தொற்று ஏற்படுகிறது. இதைத் தடுக்க, அடிக்கடி கைகள் மற்றும் கால்களை சோப்பு போட்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கைகளை சுத்தமாக கழுவுவது மிகவும் நல்லது. கைகளை கழுவாமல் மூக்கு, வாய் மற்றும் கண்களை தொடக்கூடாது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் இருமல், தும்மல் இருப் பவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும்.

சளி, காய்ச்சல், இருமல், தும்மல், தலைவலி மற்றும் தொண்டை வலி போன்றவை பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும். சிலருக்கு இந்த அறிகுறிகளுடன் வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அதனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

முறையாக சிகிச்சைப் பெற்றால்ஒருவாரத்தில் காய்ச்சல் குணமடைந்துவிடும். யாரும் தானாககடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது என்று சுகாதாரத் துறைஅதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள், பரவும் விதம் அனைத்தும் பன்றிக்காய்ச்சலை போன்றதுதான் என்பதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் தடுப்புநடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x