போலீஸாரின் அபராத குறுஞ்செய்தியால் சென்னையில் மாயமான பைக் திருநெல்வேலியில் சிக்கியது- திருடிய பட்டதாரி இளைஞர் கைது
போக்குவரத்து விதிமீறலுக்காக போலீஸார் விதித்த அபராதத் தொகை குறித்த குறுஞ்செய்தியால் சென்னையில் காணாமல் பைக் ஒன்று திருநெல்வேலியில் சிக்கியது.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் கபிலன். இவரது பைக் கடந்த மாதம் வீட்டுமுன் நிறுத்தி இருந்தபோது காணாமல் போனது. இதுகுறித்து சூளை மேடு போலீஸில் புகார் அளிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், போக்குவரத்து விதிகளை மீறிய தாக கபிலன் செல்போனுக்கு கடந்த வாரம் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என காவல் துறை தரப்பில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கபிலன், இதுகுறித்து சூளைமேடு போலீஸாரிடம் விவரத்தைக் கூறியுள்ளார்.
தற்போது விதிமீறலுக்கான அபராதம் இ-சலான் இயந்திரங்கள் மூலம், டெபிட் அல்லது கிரடிட் கார்டுகளைக் கொண்டு பெறுகின்றனர். இவ்வாறு அபராதம் விதிக்கப்படும்போது, வாகன உரிமையாளரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வரும். இப்படிதான் கபிலனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
சூளைமேடு போலீஸார் நடத்திய விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதிபோலீஸாரால் அபாரதம் விதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுபற்றி திருநெல்வேலி போலீஸாரிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது, பைக்கை ஓட்டி வந்த நபர், திருநெல்வேலியைச் சேர்ந்த கொம்பையா (27) எனத் தெரியவந்தது. இதையடுத்து, திருநெல்வேலி விரைந்த போலீஸார் கொம்பையாவை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவரிடமிருந்து 6 கார்கள், 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “பொறியியல் பட்டதாரியான கொம்பையா, சென்னையில் உள்ள சகோதரி கணவர் அருணாச்சலம், மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்,தில்லை நடராஜன், வானமாமலை ஆகியோருடன் இணைந்து, பைக்மற்றும் கார் திருட்டில் ஈடுபட்டுள்ளார். திருடும் வாகனங்களை சாலை ஓரங்களில் வாரக்கணக்கில் நிறுத்தி வைத்து, பழைய வாக னம்போல் எடுத்துச் சென்றிருப்ப தாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகிறோம்” என்றனர்.
