Published : 19 Feb 2020 07:22 AM
Last Updated : 19 Feb 2020 07:22 AM

இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்த இயந்திரங்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: அண்ணா பல்கலைக்கழக பயிலரங்கில் விஞ்ஞானி செந்தில்குமார் கருத்து

விவசாயத் தொழிலை மேம்படுத்த, இன்றைய காலகட்டத்தில் இயந்திரங்கள் பயன்பாடு அவசியமானது என்று விஞ்ஞானி செந்தில்குமார் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும நீர்ப்பாசன பொறியாளர்கள் மாணவர் அமைப்பு மற்றும் டாஃபே நிறுவனம் சார்பில் ‘வேளாண்மையில் டிராக்டர் மற்றும் இயந்திரங்களின் தேவை’ என்ற தலைப்பில் பயிலரங்கம் சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் மத்திய விவசாய பொறியியல் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டி.செந்தில்குமார்கலந்து கொண்டு மாணவர்களுக்கு விவசாய இயந்திரங்களின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

அதன்பின் விஞ்ஞானி டி.செந்தில் குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தற்போதைய காலத்தில் விவசாயம் செய்வதற்கான ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க விவசாயத் தொழிலில் இயந்திரங்கள் பயன்பாடு அவசியமானதாக மாறியுள்ளது. அதனால் விவசாயத்துக்கு உதவக்கூடிய பல்வேறு இயந்திரங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. தற்போது நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு அறுவடை செய்ய இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அடுத்தகட்டமாக ஆளில்லா மல் இயங்கும் வகையிலான டிராக் டர்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய இயந்திரங்களின் பயன்பாட்டால் குறைவான நேரத்தில் பணிகளை முடிப்பதுடன், தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தவிர்க்கலாம். மேலும், இதுதொடர்பாகஇன்றைய தலைமுறை இளைஞர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதன்மூலம் விவசாயத்தில் இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரித்து அந்த தொழிலை மேம்படுத்த முடியும். மேலும், விவசாயிகள் சந்திக்கும் சிக்கல்களுக்கான தீர்வுகளை நோக்கிய ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிலரங்கில் வேளாண்மை மற்றும் இயந்திரவியல் பொறியியல் துறையைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் 100 பேர்களை தேர்வு செய்து டாஃபே நிறுவனம் சார்பில் மே மாதம் உண்டு உறைவிட வசதிகளுடன் பயிற்சி தரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x