Last Updated : 19 Feb, 2020 07:11 AM

 

Published : 19 Feb 2020 07:11 AM
Last Updated : 19 Feb 2020 07:11 AM

‘க்யூ ஆர் கோடு’ மூலமாக ஆன்லைனில் பண மோசடி: விழிப்புடன் செயல்பட சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை

சென்னை

‘க்யூ ஆர் கோடு’களைப் பெற்று ஆன்லைனில் நூதன முறையில் பண மோசடி நடப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஆன்லைன் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் செயல்பட சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆன்லைன் மூலம் பொதுமக்கள் பொருட்களை வாங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டிலிருந்தே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள முடிவதால் அதுபலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் தற்போது இதில் பல மோசடிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை வழங்காமல் கால தாமதம் செய்வது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என மோசடிகளின் பட்டியல் நீள்கிறது.

தற்போது புதிய வகை மோசடியாக பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும்போது ‘க்யூ ஆர் கோடு’ மூலமாக பணத்தை நூதன முறையில் திருடும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தினமும் சராசரியாக 4 புகார்கள் வரை வருகின்றன.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது:

சென்னையைச் சேர்ந்த குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனது பழைய பைக்கைவிற்பனை செய்ய இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். சில மணி நேரத்தில் அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எதிர்முனையில் பேசியவர், “பைக்கைநேரடியாக வந்து பார்க்க நேரமில்லை. ஆனால் எனக்கு உங்களதுபைக் பிடித்துள்ளது. அதைரூ.10 ஆயிரம் செலுத்தி உடனடியாக வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். சில நிமிடங்களில் குமாரின் வாட்ஸ்அப்புக்குஒரு க்யூ ஆர் கோடு வந்துள்ளது.

பைக்கை வாங்கிக் கொள்வதாக கூறிய நபர், குமாரிடம், “அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் உடனடியாக பணம் வந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார். குமார் அதை ஸ்கேன் செய்த சில விநாடிகளில், அவரது வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் அந்த நபரின் வங்கிக் கணக்குக்கு சென்றுவிட்டது.

குமார் ஸ்கேன் செய்த அந்த க்யூ ஆர் கோடு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்காக அந்த நபர் அனுப்பிய குறியீடு என்பது அதன் பின்னரே தெரியவந்துள்ளது. பணத்தை இழந்த குமாரால் அந்த நபரை அதன் பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்டவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது. இப்படி பலர் தற்போது தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

ஸ்கேன் செய்வதை தவிர்க்கவும்

எனவே, பணத்தை செலுத்துவதற்கு மட்டுமே க்யூ ஆர் கோடைஸ்கேன் செய்ய வேண்டும். பணத்தை மற்றவரிடம் இருந்து பெறுவதற்கு, க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதை தவிர்க்கவும். சிலர் வணிகவரித் துறை அதிகாரி, ராணுவ அதிகாரி, போலீஸ்அதிகாரி என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தங்களது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்துடன் தங்களது பொருட்களை விற்பதாக ஆன்லைனில் பதிவிடுகின்றனர்.

அவர்கள் மீதான மதிப் பீட்டின்பேரில், பொருள் தங்களின்கைகளுக்கு வந்து சேரும்என்று சிலர் முன்னரே பணம்செலுத்தி விடுகின்றனர். ஆனால், பொருள் வந்து சேர்வதில்லை. இப்படியும் மோசடி நடக்கிறது.

இதுபோன்ற மோசடிகளின் பின்னணியில் வடமாநில கும்பல் இருப்பதாக சந்தேகிக்கிறோம். அவர்களை கைது செய்ய தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இணைய தளத்தில் பொருட்களை வாங்கும்போது பொருட்கள் கைக்கு வந்த பின்னரே பணம் செலுத்த வேண்டும், வேறு நபரிடம் இருந்து வரும் தேவையற்ற லிங்குகளை திறந்து பார்க்க வேண்டாம். இதன் மூலம் மற்றவர்கள் உங்களின் டெபிட், கிரெடிட் கார்டுகளை ஹேக் செய்வது தடுக்கப்படும். போலி மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.

இவ்வாறு சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை கூறியுள்ள னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x