சட்டம்- ஒழுங்கை எப்படிக் கையாள்வது என்று காவல்துறைக்குத் தெரியும்: சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்துக்குத் தடை கேட்ட மனுவுக்கு உயர் நீதிமன்றம் பதில்

சட்டம்- ஒழுங்கை எப்படிக் கையாள்வது என்று காவல்துறைக்குத் தெரியும்: சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்துக்குத் தடை கேட்ட மனுவுக்கு உயர் நீதிமன்றம் பதில்
Updated on
1 min read

சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்திற்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உயர் நீதிமன்றம், சட்டம்- ஒழுங்கைக் கையாள்வது எப்படி என காவல்துறைக்குத் தெரியும் என்று பதிலளித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், சட்டப்பேரவையில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

திமுக சார்பில் 2 கோடி கையெழுத்துகள் பெறப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டது. தடியடி நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், சிஏஏவை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் தொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் அங்கேயே இரவு, பகல் பாராமல் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அங்கேயே சமையல் செய்து உணவும் வழங்கப்படுகிறது.

சட்டப்பேரவையில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (பிப்-19) அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன. இது மிகப்பெரிய முற்றுகைப் போராட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாளை நடக்க உள்ள சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி அவசர வழக்காக எடுத்துக்கொள்ள முறையீடு செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பிப்.19 போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி வாராகி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். மனுதாரர் வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டது.

வழக்கு பட்டியலில் வரும்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும், பேரணியின்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதனைக் காவல்துறை கண்காணித்துக் கொள்ளும். சட்டம்-ஒழுங்கை எப்படிக் கையாள்வது என்று காவல்துறைக்கு நன்றாகத் தெரியும் என நீதிபதிகள் தெரிவித்து முறையீட்டை ஏற்க மறுத்துவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in