அமைச்சர் பாண்டியராஜன் மீதான உரிமை மீறல்: சபாநாயகர் மறுத்ததால் திமுக வெளிநடப்பு

அமைச்சர் பாண்டியராஜன் மீதான உரிமை மீறல்: சபாநாயகர் மறுத்ததால் திமுக வெளிநடப்பு
Updated on
2 min read

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியதை அடுத்து திமுக உரிமை மீறல் கொண்டு வந்தது. அது உரிமை மீறல் இல்லை என சபாநாயகர் கூறியதால் எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்தது.

2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் சிஏஏ குறித்து பேசும்போது இலங்கைத்தமிழருக்கான இரட்டை குடியுரிமை குறித்து பேசினார், அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பாண்டியராஜன் சிஏஏ விவகாரத்தில் இலங்கைத் தமிழருக்காக இரட்டைக் குடியுரிமை குறித்துப் பேசினார்.

''இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. அது சாத்தியமே. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பல ஆண்டுகளாக இரட்டைக் குடியுரிமை பற்றி வலியுறுத்தி வந்தார். இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமையே இதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவும் இந்தியக் குடியுரிமையை வலியுறுத்துகிறது.

நாங்கள் இரட்டைக்குடியுரிமையை வலியுறுத்தக்காரணம் என்றாவது நாடுதிரும்பும் வாய்ப்பு இலங்கைத் தமிழருக்கு கிடைத்தால் அது அவர்களுக்கு பயனாக இருக்கும் என்பதற்காகத்தான். இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரனே தமிழக அரசை பாராட்டியுள்ளார், எங்களது நிலைப்பாட்டில் தவறில்லை எனப் பேசினார்'' என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை தொடர்பாக அமைச்சர் பாண்டியராஜன் பேசியது குறித்து உரிமை மீறல் பிரச்சினையை திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு கொண்டு வந்தார். அவரது வாதத்தில் “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரட்டைக்குடியுரிமை அனுமதி இல்லை என தெரிவித்து விட்டார். ஆனால் அமைச்சர் பாண்டியராஜன் இலங்கை தமிழ் மக்களுக்கு இந்தியக்குடியுரிமைகூட கிடைக்கக்கூடாது என்கிற உள் நோக்கத்தோடு அவைக்கு தவறான தகவலை தருகிறார், இது சபை உரிமை மீறல் ஆகவே அவர்மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

அதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் தனபால், ''இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை சாத்தியம் என அமைச்சர் பாண்டியராஜன் பேசியதில் உரிமை மீறல் இல்லை'' என்று தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன், ''இரட்டைக் குடியுரிமை தரப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவிக்கிறார். குடியுரிமைப் பிரச்சினை என்பது மத்திய அரசு சம்பந்தப்பட்டது. மத்திய அமைச்சரால் முடியாது என்று சொன்ன விஷயத்தை தமிழக அமைச்சர் முடியும் என்று சொல்கிறார். இவர் போனால் வந்தால் என இருக்கிற அமைச்சர். அவர் பேசியது அவை உரிமை மீறல்.

ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கிறேன் என பல கதைகளைச் சொல்கிறார். விஷயத்துக்கு வரவில்லை. மத்திய அரசு கொடுக்க முடியாததை இவர் எப்படித் தர முடியும், இதை சபாநாயகரிடம் சொன்னால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in