Published : 18 Feb 2020 11:25 AM
Last Updated : 18 Feb 2020 11:25 AM

ஒலி மாசில் முதலிடம்: சென்னையில் இரைச்சலைக் கட்டுப்படுத்த வேண்டும்; ராமதாஸ்

சென்னையில் ஒலி இரைச்சலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (பிப்.18) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் இரைச்சல் நிறைந்த பெருநகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. சென்னையில் அதிகரித்து வரும் ஒலி மாசைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் நோய்களும், மன அழுத்தமும் நிறைந்த நகரமாக சென்னை சீரழிவதைத் தடுக்க முடியாது.

இந்தியாவின் முன்னணி பெருநகரங்களில் அதிகரித்து வரும் ஒலி மாசு குறித்த புள்ளிவிவரங்களை ஆண்டுக்கு ஒருமுறை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் கணக்கெடுப்பு விவரங்களை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவின் முன்னணி பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகியவற்றில் சென்னையில்தான் அதிக ஒலி மாசு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் அதிகபட்ச இரைச்சல் பகல் நேரங்களில் 55 டெசிபல் அளவையும், இரவு நேரங்களில் 45 டெசிபல் அளவையும் தாண்டக்கூடாது என விதிகள் கூறுகின்றன.

ஆனால், சென்னையில் பகலில் 67.80 டெசிபல் அளவும், இரவில் 64 டெசிபல் அளவும் இரைச்சல் இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. இந்தியத் தலைநகர் டெல்லியிலேயே ஒலி அளவு பகலில் 61.3, இரவில் 57 டெசிபல்தான் உள்ளது. மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் பகல் நேர ஒலி அளவு 64 டெசிபல் என்ற அளவிலேயே உள்ளன. கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் ஒலி அளவு குறைவாகவே இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சென்னையில் ஒலி மாசு குறித்து யாருக்கும், எந்த அக்கறையும் இல்லாததுதான் இந்த நிலைக்கு காரணம் ஆகும்.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதக் கணக்கெடுப்பின்படி ஒலி மாசு நிறைந்த பெரு நகரங்களில் சென்னை நான்காவது இடத்தில்தான் இருந்தது. ஆனால், ஒரே ஆண்டில் முதலிடத்திற்கு வந்திருப்பது அதிர்ச்சி மட்டுமின்றி அச்சத்தையும் ஏற்படுத்தும் மாற்றம் ஆகும். ஒலி மாசை வெறும் இரைச்சல் என்று கூறி கடந்து சென்று விட முடியாது. ஒலி மாசு உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால் மக்களுக்கு மிக மோசமான சுகாதாரக் கேடுகள் ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக அளவில் ஏற்படும் நோய்களில் 25% நோய்களுக்கு ஒலி மாசு உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான் காரணமாக உள்ளன. அதிக இரைச்சல் காரணமாக இதய நோய்கள், அதிக ரத்த அழுத்தம், உடல் எரிச்சல், கவலை, மன அழுத்தம், ரத்த நாள நோய்கள், கேட்டல் திறன் குறைவு, தூக்கம் பாதிக்கப்படுதல் ஆகிய நோய்கள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒலி மாசு காரணமாக குழந்தைகளுக்குக் கற்றல் குறைபாடு, அறிவு வளர்ச்சிக் குறைபாடு ஆகியவையும் ஏற்படுகின்றன. இவற்றைக் கடந்து உளவியல் மற்றும் உணர்வு ரீதியான பாதிப்புகளையும் ஒலி மாசு ஏற்படுத்துகிறது.

உடல் நலம், மன நலம் ஆகியவற்றைக் கடந்து பொருளாதார இழப்புகளுக்கும் ஒலி மாசு காரணமாக உள்ளது. இரவு நேர ஒலி மாசு காரணமாக தூக்கம் பாதிக்கப்படும்போது, அது சம்பந்தப்பட்டவர்களின் உடல் நலத்தை மட்டுமின்றி, உற்பத்தித் திறனையும் குறைக்கிறது. பகல் நேரத்திலும் அதிக இரைச்சல் உற்பத்தியைப் பாதிக்கிறது. இயல்பை விட 10 டெசிபல் கூடுதலாக இரைச்சல் ஏற்படும்போது, அதனால் 5% உற்பத்தி இழப்பு ஏற்படுவதை கென்யாவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் உறுதி செய்கின்றன. ஆகவே உடல் நலனுக்கும், பொருளாதார நலனுக்கும் ஒலி மாசு கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

சென்னையில் ஒலி மாசு அதிகரிப்பதற்கான காரணங்களில் முக்கியமானது வாகனங்கள் எழுப்பும் ஒலி ஆகும். சென்னை எழும்பூரில் கண் மருத்துவமனை அமைந்துள்ள இடம் அமைதிப் பகுதியாகும். அங்கு பகல் நேரத்தில் அதிகபட்சமாக 50 டெசிபல் அளவுக்கு மட்டுமே ஒலி அளவு இருக்க வேண்டும். ஆனால், சென்னையின் சராசரி அளவை விட அதிகமாக 71 டெசிபல் அளவுக்கு இரைச்சல் உள்ளது. அதற்கு மிக முக்கியக் காரணம் வாகனங்களின் இரைச்சல் ஆகும். இது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

சென்னையைப் போலவே மும்பையும் ஒலி மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைக் கட்டுப்படுத்த மும்பை காவல்துறை புதிய உத்தியைக் கடைப்பிடித்து வருகிறது. போக்குவரத்து சிக்னல்களில் பச்சை சிக்னல் மாறுவதற்கு முன்பாக வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் ஒலிப்பானை அழுத்துவதுதான் ஒலி மாசுக்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, சிக்னல் மாறும்போது, வாகன ஓட்டிகள் ஒலிப்பானை அழுத்தி, அதனால் ஒலி அளவு அதிகரித்தால், சிக்னல் மாறுவதற்கு மாறாக, மீண்டும் பழைய நிலைக்கே சென்று விடும். அதனால், வாகன ஓட்டிகள் அதிக நேரம் காத்திருக்க நேரிடும். இந்த முறை காரணமாக சிக்னல்களில் வாகன ஓட்டிகள் ஒலிப்பானை அழுத்துவதையே நிறுத்தி விட்டனர். இந்த முறையை சென்னையிலும் காவல்துறை நடைமுறைப்படுத்தி வெற்றி பெறலாம்.

இது தவிர மிதிவண்டிப் பயணத்தை ஊக்குவித்தல், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் கார்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பானை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் ஒலி இரைச்சலைக் கட்டுப்படுத்த முடியும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் சென்னையில் ஒலி இரைச்சலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை ஓர் இயக்கமாகவே நடத்த அரசு முன்வர வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தவறவிடாதீர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x