புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் சீனாவில் இருந்து வந்த ஹோட்டல் உரிமையாளர் மரணம்- சுகாதாரத் துறை அலுவலர்கள், போலீஸார் விசாரணை

சக்திகுமார்
சக்திகுமார்
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில், சீனாவில் இருந்து வந்த ஹோட்டல் உரிமையாளர் மரணமடைந்தது தொடர்பாக சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவுடையார்கோவில் அருகேஉள்ள கோதைமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சக்திகுமார்(45). ஆவுடையார்கோவிலில் சொந்தமாகக் கட்டியுள்ள வீட்டில் இவரது மனைவிகாயத்ரியும், மகனும் வசித்து வருகின்றனர். சக்திகுமார் கடந்த 10 ஆண்டுகளாக சீனாவில் ஹோட்டல் நடத்தி வந்தார். கடந்த பிப். 4-ம்தேதி அங்கிருந்து புறப்பட்டு சக்திகுமார் ஆவுடையார்கோவிலுக்கு வந்துள்ளார்.

அதன்பிறகு, திடீரென சக்திகுமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, உள்ளூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், குணமடையாததால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பிப். 13-ம் தேதி சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் ஆவுடையார்கோவிலில் தகனம் செய்யப்பட்டது.

சீனாவில் ‘கோவிட்-19’ காய்ச்சல் பரவிவரும் நிலையில் அங்கிருந்து வந்தவர், மர்மமான முறையில் உயிரிழந்த தகவல் சுற்றுவட்டார ஊர்களில் பரவத் தொடங்கியதால் அப்பகுதி மக்களுக்கு அச்சம்ஏற்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத் துறை,வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் சக்திகுமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். சக்திகுமார் சீனாவில் இருந்து வந்ததுகுறித்த விவரம் சுகாதாரத் துறையினருக்கு தெரியாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறியது: ஒவ்வொரு விமான நிலையங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை கொண்டுசீனாவில் இருந்து நாடு திரும்புவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்காணிப்பில் உள்ள 100-க்கும் மேற்பட்டோரில் எவருக்கும் ‘கோவிட்-19’ காய்ச்சல் பாதிப்புக்கான எந்த அறிகுறியும் இல்லை.

சக்திகுமார் சீனாவில் இருந்துதாய்லாந்து வழியாக மலேசியாவுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்ததால் இவரை மலேசியாவில் இருந்து வந்தவர் என்ற பட்டியலில் வைத்திருந்ததால் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை.

எனினும், சக்திகுமார் ‘கோவிட்-19’ காய்ச்சலால் இறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மஞ்சள்காமாலை பாதிப்பு மற்றும் நுரையீரல் கோளாறால் கடந்த 6 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இடையில், ஹோட்டல் பர்மிட்டை மறுபதிவு செய்வதற்காக சீனாவுக்குச் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பியவர் உயிரிழந்துள்ளார் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in