சீர்காழி அருகே முருகன் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை: ரூ.1 கோடி மதிப்புடையவை என போலீஸார் தகவல்

சீர்காழி அருகே முருகன் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை: ரூ.1 கோடி மதிப்புடையவை என போலீஸார் தகவல்
Updated on
1 min read

நாகை மாவட்டம் சீர்காழி அருகே முருகன் கோயிலில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போயின.

சீர்காழியை அடுத்த கொண்டல் கிராமத்தில் பழமைவாய்ந்த குமார சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலை கீழ் பழநி என்று பக்தர்கள் அழைப்பார்கள். இக்கோயிலின் கருவறையில் முருகன், வள்ளி, தெய்வானை உற்சவர் ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோயிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற குருக்கள் நடராஜன், நேற்று காலை கோயிலைத் திறக்க வந்தபோது வெளி கேட்டின் 2 பூட்டுகள் திறந்து கிடந்தன. கோயிலுக்குள் சென்று அவர் பார்த்தபோது, கருவறையில் இருந்த 3 உற்சவர் ஐம்பொன் சிலைகளைக் காணவில்லை.

இதுகுறித்து, கோயில் தக்கார் ராஜாராமனுக்கு நடராஜன் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக ராஜாராமன் அளித்த புகாரின்பேரில் சீர்காழி டிஎஸ்பி வந்தனா, இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து கோயிலைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மாற்று சாவியைப் பயன்படுத்தி கோயில் கேட் பூட்டுகளைத் திறந்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா இணைப்புகளைத் துண்டித்துவிட்டு, கருவறையின் பூட்டைத் திறந்து சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும், கோயிலின் உள் மற்றும் வெளிப் பகுதியில் மர்ம நபர்கள் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால், மர்ம நபர்களைப் பற்றிய விவரம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை.

இரண்டரை அடி உயர முருகன் சிலை மற்றும் தலா ஒன்றரை அடிஉயர வள்ளி, தெய்வானை சிலைகள் ஆகியவற்றின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகம் இருக்கலாம் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமரா இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதால், கோயிலுக்கு வெளியே வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைப் பெற்று போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மாற்று சாவியைப் பயன்படுத்தி கோயில் கேட் மற்றும் கருவறை பூட்டுகள் திறக்கப்பட்டு இருப்பதால், கோயிலுக்கு அடிக்கடி வரும் நபர்கள்தான் சிலைகளைக் கொள்ளையடித்திருக்கக் கூடும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து சீர்காழி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in