

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையத்தின் ஆயுட்காலம் முடிவடைவதால், அதை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 3 திறந்த வெளி நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இங்கு வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியில் இருந்து நெய்வேலியில் உள்ள 5 அனல்மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுவதும் உள்ள மிகப் பழமையான அனல் மின் நிலையங்களை மூட உத்தரவிட்டுள்ளது. அதில், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியாவின் முதல் அனல் மின் நிலையமும் ஒன்று.
உற்பத்தி காலம் முடிந்தது
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையத்தில், 1962-ம் ஆண்டு ரஷ்ய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் மின் உற்பத்தி தொடங்கியது. இதன் உற்பத்தி காலம் 25 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மேலும் 15 ஆண்டுகள் உற்பத்தி காலம் நீடிக்கப்பட்டது. இது ஒரு மணி நேரத்துக்கு 500 மெகாவாட்மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
இந்த அனல் மின்நிலையம் இன்றுவரை நல்லமுறையில் இயங்கி மின் உற்பத்தியை செய்து வருகிறது. இருந்த போதிலும், இதன் நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி காலம் முடிவடைந்ததால், இதற்கு மாற்றாக ஒரு மணி நேரத்துக்கு 1000 மெகாவாட் கொண்ட புதியஅனல் மின்நிலையத்தின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ளன. இதன் 2 பிரிவுகளில் ஒருபிரிவு உற்பத்தியை தொடங்கிஉள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதலாவது அனல் மின்நிலையத்தை மூட உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து என்எல்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “முதல் அனல் மின்நிலையம் நல்லமுறையில் இயங்கி வருகிறது. அதற்கு வரும் மார்ச் மாதம்வரை அனுமதி உள்ளது. அதற்கு மாற்றாக தொடங்கப்பட்டுள்ள புதிய அனல் மின்நிலையம் முழு உற்பத்தியை தொடங்கும் வரை மத்திய அரசிடம் முதல் அனல் மின்நிலையம் 6 மாதங்கள்வரை இயங்க கால அவகாசம் கேட்டுள்ளோம், அதுகிடைத்துவிடும்'' என்று தெரிவித்தனர்.