Published : 18 Feb 2020 07:21 AM
Last Updated : 18 Feb 2020 07:21 AM

ஏழைகளுக்கு இலவச சுற்றுலா: தமிழக அரசுடன் ஐஆர்சிடிசி பேச்சுவார்த்தை

ஐஆர்சிடிசி-யின் தென்மண்டல பொதுமேலாளர் எஸ்.எஸ்.ஜெகநாதன், சென்னை மண்டல மேலாளர் எல்.சுப்பிரமணி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

இந்திய ரயில்வே உணவு , சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மூலம் பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆன்மிக சுற்றுலா இடங்களை காணும்வகையில் இயக்கப்பட்டு வரும்பாரத தரிசன சுற்றுலா ரயிலுக்குமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தென்மண்டலத்தில் இருந்து இதுவரை370-க்கும் மேற்பட்ட சுற்றுலாக்களை நடத்தியுள்ளோம். இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

ராமாயண சரித்திரம் நிகழ்ந்த இடங்களுக்கே நேரில் சென்று பார்க்கும் வகையில் ராமாயண யாத்திரைக்கு புதிதாக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் வரும் மார்ச் 5-ம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக கர்நாடக மாநிலம் ஹோஸ்பேட், நாசிக் பஞ்சவடி,சீதா குகைகள் தரிசனம், உத்தரபிரதேசத்தில் உள்ள சித்திரைக்கூடம், நேபாளத்தில் உள்ள சீதை பிறந்த இடமாக கருதப்படும் ஜனக்புரி, அயோத்யா ராமஜன்ம பூமிபோன்ற ராமாயணம் தொடர்பானஆலயங்களை தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 13 நாட்கள் கொண்டஇந்த யாத்திரை செல்ல ஒருவருக்கு கட்டணம் ரூ.15,990 ஆகும்.ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி உள்ளிட்டவை இதில் அடங்கும். இது தொடர்பாக மேலும் தகவல்களைப் பெற 9003140680, 8287932121 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

முதல்வரின் புனித யாத்திரை திட்டத்தின்கீழ் பல்வேறு மாநிலங்களில் ஏழை மக்களை சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்துச் செல்கிறோம்.

இதுவரை டெல்லி, உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநில அரசுகளின் புரிந்துரையின் அடிப்படையில் தென்மாநிலங்களுக்கு இலவசமாக சுற்றுலாவுக்கு அழைத்து வந்துள்ளோம். இதேபோல், இத்திட்டத்தின்கீழ் பிற மாநிலங்களுக்கு ஏழை மக்களை அழைத்துச் செல்வது குறித்து தமிழகம், கர்நாடகா மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x