

சீமைக் கருவேல மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பது குறித்து மத்திய அரசின் ‘நீரி’ அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நிலத்தடி நீர், சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்டவும், இதுதொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவும், இயக்கமாக செயல்படுத்தவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சீமைக் கருவேல மரங்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மேகநாதன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, சீமைக் கருவேல மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்தும், இதுதொடர்பாக தமிழக அரசின் நிபுணர்கள் குழு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் அடங்கிய முழு அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர், நீர்பிடிப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றபோதும், அவற்றால் சுற்றுச்சூழலுக்கு எதிர்மறை பாதிப்புகள் எதுவும் இல்லை என்று, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட முதன்மை வனப் பாதுகாவலர் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆஜராகி வாதிட்ட வைகோ
நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வைகோ, அந்த அறிக்கைக்கு கடும்ஆட்சேபம் தெரிவித்து, சீமைக் கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான ஆய்வு அறிக்கைகளை தலைமை நீதிபதியிடம் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, தனது வாதத்தில் அவர் கூறியதாவது:
சீமைக் கருவேல மரங்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கக்கூடியவை. இவற்றால் தென் மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இவற்றில் பறவைகள் கூடுகட்டாது. ஆடு, மாடுகள் நிழலுக்கு ஒதுங்காது. இதன் அருகில் வேறு செடி, கொடிகள் வளராது. இந்த மரங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு விவசாயிகள், பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்து மரங்களை அகற்றினர். இப்பணியில் நீதிபதிகள்கூட பங்கெடுத்தனர். 150 வழக்கறிஞர்கள் ஆணையர்களாக செயல்பட்டனர்.
இதுதொடர்பாக வனத்துறை அளித்துள்ள அறிக்கை ஒருதலைபட்சமானது. ஏற்கத்தக்கது அல்ல. இதுதொடர்பாக மத்திய அரசின் ‘நீரி’ (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் - NEERI) அமைப்பின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த அமைப்பு ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலை குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தந்துள்ளது.
இவ்வாறு வைகோ கூறினார்.
இதையடுத்து, சீமைக் கருவேல மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பது குறித்து மத்திய ‘நீரி’ அமைப்பு 3 மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.