

தனி நீதிபதி உத்தரவுப்படி, நடிகர் சங்கத் தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால், நீதிமன்ற அனுமதியின்றி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது. முன்னாள் நீதிபதி கோகுல்தாஸை நியமித்து 3 மாதங்களுக்குள் மறுதேர்தல் நடத்த வேண்டும்’ என்று தனி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு செய்தார்.
‘‘உயர் நீதிமன்ற உத்தரவின்படியே கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டது. முறையாக பொதுக்குழுக் கூட்டம் கூட்டி எடுக்கப்பட்ட முடிவின்படியே தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழக அரசும் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது. இதை கவனத்தில் கொள்ளாமல் தேர்தலை தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘நடிகர் சங்கத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி, தேர்தல் தொடர்பான நடவடிக்கையை தொடரலாம். ஆனால், நீதிமன்ற அனுமதியின்றி தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை பிப்.27-க்கு தள்ளிவைத்தனர்.