Published : 18 Feb 2020 06:55 AM
Last Updated : 18 Feb 2020 06:55 AM

தோட்டக்கலை பயிர்களில் பரவும் அமெரிக்க பூச்சிகள்: உலக அளவில் தாக்குதலால் 100 பில்லியன் டாலருக்கு இழப்பு

தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்களில் அமெரிக்காவின் ‘ரூகோஸ் ஸ்பைரலிங்’ என்ற வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் உலக அளவில் ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் பரவி பயிர்களைத் தாக்கும் வைரஸ் நோய்கள் விவசாயத்தை மட்டுமின்றி காடுகள், கால்நடைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றையும் பாதிக்கின்றன. இது நாட்டின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்கும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் மூலம் அந்நாட்டு வைரஸ் பூச்சிகள் ஊடுருவுகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் ‘ரூகோஸ் ஸ்பைரலிங்’ என்கிற வெள்ளை ஈ வைரஸ் பூச்சிகள் தற்போது தமிழகத்தில் தென்னை, பாக்கு, கொய்யா, வாழை, பப்பாளி, பலா, அருநெல்லி, மாதுளை போன்ற பயிர்களை அதிகம் தாக்குகின்றன. இதில் அதிக பாதிப்பு தென்னைக்குத்தான். விவசாயிகள் இந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கலக்கம் அடைந்துள்ளனர்.

இவை, இலையின் அடியில்கூடுகட்டி சத்துகளை உறிஞ்சுகின்றன. இவை, இலைகளின் அடிப்பரப்பில் வட்ட அல்லது சுருள் வடிவில் 50 முதல் 60 முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகளில் இருந்து குஞ்சுகள் 4 முதல் 7 நாட்களில் வெளியாகி 15 நாட்கள் வரை சாறு உறிஞ்சும். இதன்இரண்டாம் வினையாக அதில் வடியும் தேன் மூலமாக இலைமீது கருப்பாக ஒரு பூஞ்சை வளர்கிறது. இதனால், ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூலை பாதிக்கிறது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதி கூறியதாவது: ரூகோஸ் ஸ்பைரலிங் வைரஸ், அமெரிக்காவில் இருந்துஇந்தியாவுக்கு ஊடுருவி உள்ளது.இதுபோன்ற பல்வேறு பூச்சியினங்கள் பயிர்களைத் தாக்குவதால் உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் 100 பில்லியன் டாலருக்கு சேதம் மற்றும் இழப்பு உண்டாகிறது. சுமார் 25 சதவீதம் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

இவ்வகையான பூச்சிகள் உயிரியல் சமநிலையைப் பாதித்து பிறகு அழிவை ஏற்படுத்துகின்றன. உலகமயமாக்கல் மூலமாக உலகின் ஓரிடத்தில் விளைந்த பொருட்கள், தானியங்கள் மற்ற நாடுகளில் உள்ள மக்களுக்கு தற்போது எளிதில் கிடைக்கிறது. இது தீங்கிழைக்கும் உயிரினங்கள் பரவ எளிதில் வழிவகுக்கிறது.

‘ரூகோஸ் ஸ்பைரலிங்’ பாதிப்புஏற்படுவதற்கு முன்பு ஒருங்கிணைந்த முறையில் இந்த பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். பாதிப்பைக் குறைக்க தாய்ப் பூச்சிகளை கவரும் வகையில் ஏக்கருக்கு 7 எண்கள் வீதம் மஞ்சள் நிற ஒட்டும் அட்டை பொறிகளை வைக்க வேண்டும். மாலை நேரத்தில் தோட்டத்தில் உலர்ந்த தென்னை ஓலைகளை அரை மணி நேரம் எரிக்கலாம். இவ்வாறு செய்தால் பூச்சிகள் நெருப்பில் விழுந்து மடியும்.

ஒரு லிட்டர் வெர்டிசிலியம் பூஞ்சாணத்தை நூறு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். ஒட்டுண்ணிகளான என்கார்ஸ்யா ஷெய்டெரிஸ் அல்லது என்கார்ஸியா காடெல்பே ஆகியவற்றை 1 ஏக்கருக்கு 100 எண்கள் அளவில் பாதிக்கப்பட்ட பயிர்களில் விடுவதன் மூலமும் கட்டுப்படுத்தலாம். இலையின் மேல் காணப்படும் கரும்பூஞ்சாணங்களின் மீது மைதா மாவு பசை கரைசலை தெளிக்கலாம். வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் தெளிக்கலாம்.

வேரில் ரசாயன மருந்து செலுத்துதல், தெளித்தல் கூடாது. அவ்வாறு செய்தால் அதன் இயற்கை எதிரிகள் அழிந்து பூச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x