Published : 17 Feb 2020 21:06 pm

Updated : 17 Feb 2020 21:06 pm

 

Published : 17 Feb 2020 09:06 PM
Last Updated : 17 Feb 2020 09:06 PM

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிஐ விசாரணை வேண்டும்- திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் 

cbi-probe-into-tnpsc-scam-decision-at-dmk-district-secretaries-meeting

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் - குறிப்பாக 2016 முதல் இன்றுவரை நிகழ்ந்துள்ள பணி நியமன முறைகேடுகளை உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் சிபிஐ விசாரித்திட வேண்டும் என திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

“அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஒட்டுமொத்த பணி நியமனங்கள் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும்:

“மூன்றாண்டு சாதனை” என்று நீட்டி முழங்கிக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியில் நிகழ்ந்துள்ள அரசுப் பணிகளுக்கான பல்வேறு தேர்வுகளும், நியமனங்களும் ஊழலுக்குப் புதியதொரு வரலாறு எழுதிட வித்திட்டுள்ளது என்பதற்கும்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மாபெரும் மோசடி நடைபெற்று - தேர்வுகளின் மீதான நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை அதிமுக ஆட்சியில் நசுக்கப்பட்டிருப்பதற்கும்; கழக மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

“குரூப்-4 தேர்வில் முதலில் வந்த 100 பேருக்குள் ஒரேமையத்தில் எழுதிய 40 பேர் மாநில அளவில் தேர்வானது” கடுமையாக உழைத்த இளைஞர்களுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்து - கழகத் தலைவர் அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இன்றைக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை மூலம், 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றாலும், அயிரை மீன்கள்தான் பிடிபட்டுள்ளதே தவிர - தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட முதலைகள் இதுவரை பிடிபடவில்லை.

ஒரு ரிக்கார்டு கிளார்க், வேன் டிரைவர் உள்ளிட்டோர், “பெரிய இடத்து” அனுசரணையும் ஆதரவுமின்றி இவ்வளவு பெரிய முறைகேட்டைச் செய்திருப்பார்கள் என்பது, அதீத கற்பனைக் காட்சிகள் போல் இருக்கிறதே தவிர - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வெளிப்படைத் தன்மையின் அஸ்திவாரமே ஆடிப் போய் நிற்கிறது என்பதே உண்மை.

2016 மற்றும் 2017ல் நடைபெற்ற க்ரூப்-2ஏ தேர்வுகள், கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுகள் எல்லாமே முறைகேடுகளால் வீசும் முடை நாற்றத்தில் சிக்கி, அதிமுக ஆட்சியில் அழுகல் நாற்றம் பெருகி வீசிக்கொண்டிருக்கிறது. இது தவிர மோட்டார் வாகன ஆய்வாளர் பதவித் தேர்வுகள், கட்டிடக்கலை இளநிலைப் பொறியாளர் பதவிக்கான தேர்வுகள் எல்லாவற்றிலும் சர்ச்சைகளும் சந்தேகங்களும் கொடிகட்டிப் பறந்துள்ளன.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகியவற்றிற்கான 8888 பதவிகளை நிரப்புவதற்கான தேர்வில் பங்கேற்றவர்களில் 10 சதவீத விளையாட்டு சிறப்புக் கோட்டாவில் சேருவதற்கு சான்றிதழ் கொடுத்தவர்களில் 1000 பேருடைய சான்றிதழ் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“2016-ல்- க்ரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேரில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து 64 பேர் வெற்றி பெற்றதும்” “இந்த மெகா ஊழல் குறித்து உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறும் விசாரணையில் மூன்று விசாரணை அதிகாரிகளை மாற்றி வழக்கை பிசுபிசுக்க வைத்ததையும்”, இந்தக் கூட்டம் கடுமையாகக் கண்டிக்கிறது.

ஆகவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் - குறிப்பாக 2016 முதல் இன்றுவரை நிகழ்ந்துள்ள பணி நியமன முறைகேடுகளை உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் சிபிஐ விசாரித்திட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்யும் வகையில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை நிறைவேற்றிடுக:

“காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பேன்” என்று சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்காதீர்கள்” என்று, மத்திய பா.ஜ.க. அரசுக்கு ரகசியமாகக் கடிதம் எழுதி, கடந்த காலத்தை மறைத்து எதிர்காலத்தை நினைத்து, மண்டியிட்டுக் கெஞ்சி நிற்பதற்கு, மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

“இன்று மாலைக்குள் கடிதத்தை வெளியிடவில்லை என்றால் அதை நானே வெளியிடுவேன்” என்று திமுக தலைவர் விடுத்த கடும் எச்சரிக்கையினைத் தொடர்ந்து, அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அந்தக் கடிதத்தில் உள்ள கோரிக்கை, “ஏற்கனவே விவசாயப் பெருமக்கள் கடுமையாக எதிர்த்துப் பல மாதங்களாகப் போராடும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்வது குறித்து, மத்திய அரசிடம் எதையும் கேட்கவில்லை” என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அது மறைத்து வைக்கப்பட்டிருந்த பூனைக்குட்டி வெளியில் வந்தது போலாகியிருக்கிறது. முதல்வரின் கடிதத்தில் உள்ள கோரிக்கை, அரை குறையானது. நீட் தேர்வு வேண்டாம், உதய் திட்டம் வேண்டாம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் வேண்டாம் என்றெல்லாம் கடிதம் எழுதி விட்டு- பதவியில் நீடிக்க மத்திய பாஜகவின் “அனுக்கிரகம் “ அவசியம் என எண்ணி,எப்படி மாநிலத்தின் உரிமைகளை, ஒவ்வொன்றாகத் தாரை வார்த்து - மத்திய அரசின் திட்டங்களையெல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறைவேற்றியிருக்கிறதோ, அதேபோல், இப்போது பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல வாக்குறுதியிலும் - பரிதவிப்புகளுக்கு ஆளாகியிருக்கும் தமிழக விவசாயிகளை ஒட்டு மொத்தமாக ஏமாற்றி, ஒரு கபட நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

திமுகவைப் பொறுத்தவரை, “அதிமுக அரசும்- பாஜக அரசும்”, காவிரி டெல்டா பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருக்கும் நூற்றுக் கணக்கான ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்து விட்டு - “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல” சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அப்படிச் செய்தால்தான், அது பொருத்தமாகவும், பொருள் உள்ளதாகவும், வேளாண்மை வளர்ச்சிக்குப் பயனுள்ளதாகவும், விவசாயிகளுக்கு நிம்மதி தருவதாகவும், இருக்கும் என்று திமுகழகம் கருதுகிறது.

ஆகவே பழையனவற்றை ரத்து செய்துவிட்டு , புதியன புகுந்து விடாமல் கதவை இறுகச் சாத்திவிட்டு, “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல” அறிவிப்பிற்கான சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றவேற்றப்பட்டுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

CBI probeTNPSC scamDecisionDMKDistrict SecretariesMeetingடிஎன்பிஎஸ்சி முறைகேடுசிபிஐ விசாரணைதிமுகமாவட்டச் செயலாளர்கள்கூட்டத் தீர்மானம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author