Published : 17 Feb 2020 08:21 PM
Last Updated : 17 Feb 2020 08:21 PM

என்பிஆருக்கு எதிராக காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம்: திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் தீர்மானம்

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக, என்ஆர்சி சட்டத்தின் முன்னோடியாக என்பிஆரை அமல்படுத்துவதை எதிர்த்து அனைத்து மக்களைத் திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முக்கிய தீர்மானமாக என்பிஆருக்கு எதிரான தீர்மானம் வருமாறு.

“என்.பி.ஆருக்கு எதிராக தமிழ்நாட்டில் மக்களைத் திரட்டி, காந்திய வழியில், ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆரையும், ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி - 2 கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை தமிழக மக்களிடம் பெற்று, மேதகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் ஒப்படைத்து, முக்கியமான இந்த தேசியப் பிரச்சினையை அடுத்த முக்கியமான கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ள, திமுக தலைவருக்கும், இக்கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று வெற்றி பெற வைத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

அரசியல் சட்டத்தையும், நாட்டின் பன்முகத் தன்மையையும் பாதுகாத்திடும் பொருட்டு - சிறுபான்மையின மக்கள், இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் நோக்கில், தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெறும் அறவழிப் போராட்டங்கள், மத்திய பாஜக அரசையும்- பிற்போக்கான இந்த சட்டத்திற்கு ஆதரவளித்து வாக்களித்த அதிமுக, பாமக போன்ற கட்சிகளையும் பெரிதும் மிரள வைத்துள்ளது.

ஜனநாயக வழியில் அமைதியாக நடக்கும் போராட்டத்தைக் காணச் சகிக்காத அதிமுக அரசு - வெகு மக்களுக்கு எதிராகக் காவல்துறையை ஏவி விட்டு - சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் தடியடி நடத்தியிருப்பதற்கு, இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

சட்டமன்றத்தில் இன்று (17.2.2020) இது தொடர்பாகப் பிரச்சினை எழுப்பி, குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் அவர்கள் விடுத்த நியாயமான கோரிக்கையை சர்வாதிகாரத்தனத்துடன் ஏற்க மறுத்ததோடு, குடியுரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திப் பேசிய முதல்வர் பழனிச்சாமிக்கு இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

குடியுரிமைப் போராட்டத்தில் பங்கேற்றவர்களும், காவல்துறையில் சிலரும் இந்த அடிதடியில் காயம்பட்டிருப்பதற்கு அதிமுக அரசின் திட்டமிட்ட தூண்டுதலே காரணம் என்று பதிவு செய்யும் இக்கூட்டம் - காயம்பட்டவர்கள் அனைவருக்கும் தரமான சிகிச்சை வழங்கப்பட்டு - விரைந்து முழுமையான குணமடைய வேண்டும் என்று விரும்புகிறது.

அதேநேரத்தில், அதிமுக அரசு தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுக்கு மதிப்பளிக்காமல் - என்ஆர்சிக்கு வழி திறக்கும் என்பிஆரை தமிழகத்தில் நடத்தத் தன்னிச்சையாக அனுமதித்தால், அனைத்துக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து, என்பிஆருக்கு எதிராக மக்களைத் திரட்டி, அண்ணா காட்டிய காந்திய அற வழியில், மகத்தான ஒத்துழையாமை இயக்கம் ஒன்றை, திமுக நடத்திட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுவிடும் என்றும் இந்தக் கூட்டம் எச்சரிக்கை செய்ய விரும்புகிறது".

இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x