Published : 17 Feb 2020 07:42 PM
Last Updated : 17 Feb 2020 07:42 PM

உயர் நீதிமன்றம் உங்கள் இஷ்டப்படி செயல்படவேண்டும் என நினைக்கிறீர்களா?- ஏ.ஆர்.முருகதாஸுக்கு நீதிபதி கேள்வி 

தர்பார் பட விநியோகஸ்தர்கள் மிரட்டல் விடுப்பதாக பாதுகாப்பு கேட்டுவிட்டு, தற்போது புகாரை திரும்ப பெற்று கொள்வதாக கூறிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு, உயர் நீதிமன்றம் உங்களிஷ்டத்துக்கு செயல்படவேண்டும் என்று எண்ணமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை வெளியிட்டதில் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் சிலர் குற்றம் சாட்டினர். லைகா நிறுவனம், இயக்குநர் முருகதாஸ் இல்லம், ரஜினி இல்லம் என பல இடங்களுக்குச் சென்றனர்.

பிப்ரவரி 3-ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அலுவலகம் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு விநியோகஸ்தர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்நிலையில் விநியோகஸ்தர்கள் எனக் கூறிக்கொண்டு 25 அடையாளம் தெரியாத நபர்கள், தனக்கு எதிராக கோஷம் எழுப்பி, மிரட்டல் விடுப்பதால் தனக்கும், வீடு மற்றும் அலுவலகத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து இயக்குனர் முருகதாஸ் சென்னை காவல் ஆணையர், தேனாம்பேட்டை மற்றும் விருகம்பாக்கம் காவல் நிலையங்களில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருந்தார்.

போலீஸார் அதன் மீது நடவடிக்கை எடுக்காததால், தனக்கு பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், லைகா நிறுவனத்திற்காக தர்பார் படத்தில் இயக்குனராக மட்டுமே தான் பணியாற்றியுள்ள நிலையில், படத்தின் திரையரங்கு உரிமை, சாட்டிலைட் உரிமை, விநியோக உரிமை போன்றவற்றில் தனக்கு எந்த வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். மேலும், நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக லைகா நிறுவனத்தை அணுகாமல் தன்னை மிரட்டி வருவதாக குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இன்று வழக்கு மீண்டும் நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தபோது, ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் 15 பேர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில், மேற்கொண்டு தனக்கு எந்த மிரட்டல்களும் வராது என விநியோகஸ்தர்கள் சங்கத்திலிருந்து இயக்குனர்கள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், காவல்துறையிடம் கொடுத்த புகார் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள அவசியம் இல்லை என்பதால் தனது மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கபட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, விநியோகஸ்தர்கள் மிரட்டியதாக கூறி பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வது, பின்னர் சமாதானம் ஏற்பட்டுவிட்டதாக கூறி காவல்துறையில் கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டு வழக்கை முடிக்க வேண்டும் என தெரிவிப்பது, நீங்கள் நினைத்தபடி சென்னை உயர் நீதிமன்றம் செயல்படவேண்டும் என நினைக்கிறீர்களா? என கேள்வி ஏ.ஆர்.முருகதாஸுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x