Published : 17 Feb 2020 18:32 pm

Updated : 17 Feb 2020 19:00 pm

 

Published : 17 Feb 2020 06:32 PM
Last Updated : 17 Feb 2020 07:00 PM

இயற்கை உபாதைக்கு ஒதுங்கிய தலித் இளைஞரை அடித்தே கொன்ற கும்பல்; உரிய நடவடிக்கை தேவை: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

20-gang-members-beaten-up-and-killed-dalit-youngster-take-proper-action-k-balakirushnan-letter-to-cm
கே.பாலகிருஷ்ணன், முதல்வர் பழனிசாமி | கோப்புப் படம்.

செஞ்சியில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற சக்திவேல் என்ற தலித் இளைஞரை மரத்தில் கட்டி வைத்து, அடித்துப் படுகொலை செய்த குற்றவாளிகள் மீதும், துணை போன போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதம்:


“விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுக்கா, காரை கிராமத்தைச் சார்ந்த சக்திவேல் என்கிற தலித் இளைஞர் 12.02.2020 அன்று இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளார். அப்போது அந்த இடத்தில் இருந்த ராஜா மற்றும் அவரது மனைவி கௌரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் தவறாகப் புரிந்து கொண்டும், சாதி வெறியுடனும் சக்திவேலை மரத்தில் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

பிறகு அங்கிருந்த கும்பல் அவர்களது செல்போனைக் கொடுத்து சக்திவேலிடம் அவரது குடும்பத்தாரையும் வரச் சொல்லியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சக்திவேலின் தகப்பனார், சகோதரி மற்றும் குடும்பத்தினரையும் இந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது.

இச்சம்பவம் அறிந்து வந்த பெரியதச்சூர் காவல் நிலைய ஆய்வாளர் வினோத்ராஜ் மற்றும் காவலர்கள், மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட சக்திவேலைக் காப்பாற்றவோ, அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சக்திவேலின் தந்தையை அடித்துத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இந்நிலையில் சக்திவேலை மீட்ட அவரது தந்தை, தனது மகனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், வழியிலேயே சக்திவேல் உயிரிழந்துள்ளார். இந்தப் படுகொலை சாதிய வன்மத்துடன் நடந்துள்ளது என்பததைத் தெளிவாக அறிய முடிகிறது.

இறந்து போன சக்திவேலுவின் பிறப்புறுப்பு கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மேலும், மார்பு எலும்புகள் நொறுங்கியுள்ளதாகவும் தெரிகிறது. தமிழ்நாட்டில் பட்டப்பகலில் காவல்துறையினர் முன்னிலையிலேயே தலித் இளைஞர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்துவதாகும்.

மேலும், இக்கொடூரமான தாக்குதல் நடக்கும்போது காவல்துறை வேடிக்கை பார்த்தது, நடவடிக்கை எடுக்காதது காவல்துறைக்குத் தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலையில் 20 பேர் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் 9 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளது போதுமானதல்ல. மீதமுள்ளவர்களைத் தப்ப வைப்பதும் சரியல்ல. எனவே, இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல பெரியதச்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத்ராஜ் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் அவர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே, பெரியதச்சூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வினோத்ராஜ் மற்றும் அவருடன் சென்ற காவலர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், படுகொலை செய்யப்பட்ட சக்திவேல் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை20 gang membersBeaten upKilledDalit youngsterTake Proper actionK.balakirushnanLetterCMஇயற்கை உபாதைஒதுங்கியதலித் இளைஞர்அடித்து கொன்ற 20 பேர் கும்பல்உரிய நடவடிக்கைகே.பாலகிருஷ்ணன்முதல்வர்கடிதம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

cartoon

நீளும் துயரம்!

கார்ட்டூன்