Published : 17 Feb 2020 06:13 PM
Last Updated : 17 Feb 2020 06:13 PM

ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கியது.

‘திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 17-ம் தேதி (இன்று) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். திமுக உள்கட்சித் தேர்தல் தொடர்பாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்’ என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

கூட்டத்திற்கான பொருள் குறித்து அந்த அறிவிப்பில் உட்கட்சித் தேர்தல் எனக் குறிப்பிடப்பட்டது.

திமுகவில் கிளைச் செயலாளர் முதல் தலைவர் வரையிலான உள்கட்சித் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கிளை, ஒன்றியம், பேரூர், நகர், வட்டம், பகுதி, மாநகர், மாவட்டச் செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு, தணிக்கை குழு உறுப்பினர்கள், பொருளாளர், பொதுச்செயலாளர், தலைவர் என்று திமுக உள்கட்சித் தேர்தல் ஓராண்டு காலத்துக்கு மேலாக நடைபெறும். கட்சியின் 14-வது உள்கட்சித் தேர்தல் கடந்த 2012-13-ல் நடந்தது.

தற்போது உறுப்பினர் சேர்க்கை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில் திமுகவின் 15-வது உள்கட்சித் தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஏற்கெனவே அறிவித்துள்ளார். முதல்கட்டமாக கிளை அமைப்புகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து பேரூராட்சி, மாநகர வட்டங்களுக்கும், பின்னர் ஒன்றிய, நகர, மாநகரப் பகுதிகளுக்கும், அதன் தொடர்ச்சியாக மாநகர அமைப்புகளுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது.

சமீபத்தில் திமுகவில் கோவை, திருச்சி, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டனர். திருச்சியின் செல்வாக்குமிக்க கே.என்.நேரு முதன்மைச் செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டார். புதிய பொறுப்பாளர்களாக மகேஷ் அன்பில் பொய்யாமொழியும், வைரமணியும் நியமிக்கப்பட்டனர்.

இதேபோன்று சேலத்தின் வீரபாண்டி ராஜா மாற்றப்பட்டார். ஊரக உள்ளாட்சித் தேர்தல் எதிரொலியாகவும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திப்பதற்கும் இத்தகைய மாற்றங்கள் எனக் கூறப்பட்டது. ஆயினும், திமுக உட்கட்சித்தேர்தல் விரைவில் வரவுள்ளது. அதற்கான தயாரிப்புப் பணிகளும் நடக்கின்றன.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்டத் தலைமை, கீழ்மட்ட கட்சிப் பதவிகளில் தேவையற்ற சர்ச்சை, மனக்கசப்பு உருவாகாமல் தடுக்கும் விதமாக தேர்தலை நடத்தும் விதமாக கட்சித் தலைமை வழிகாட்டுதலுக்கான கூட்டமாக இந்தக் கூட்டம் பார்க்கப்படுகிறது. இதுதவிர தற்போதுள்ள அரசியல் நிலைமை, ரஜினி அரசியல் பிரவேசம், பிரசாந்த் கிஷோருடனான ஒப்பந்தம், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடு, இளைஞர் அணியுடன் மாவட்டச் செயலாளர்களின் ஒருங்கிணைப்பு போன்ற விஷயங்களும் இக்கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x