

முதல்வராகப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சரத்குமார் இன்று (பிப்.17) வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "கல்வி, சுகாதாரம், தொழில், மின்சாரம், நிதி மேலாண்மை, உள்கட்டமைப்பு, பேரிடர் மேலாண்மை, ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, இளைஞர் நலன், சுற்றுலா, தமிழ் வளர்ச்சி என துறை வாரியாக சிறப்பான செயல்பாட்டுடன், நிர்வாகத்தை திறமையாகக் கையாண்டு முதல்வராக நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கில் அயல்நாடு பயணம் சென்று முதலீடுகள் ஈர்ப்பு, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு, நிர்வாக வசதிக்காக புதிய 5 மாவட்டங்கள் பிரித்து அறிவிப்பு, 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் பணி தீவிரம், நதிகள் இணைப்பு, பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் என தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான தமிழக அரசு மென்மேலும் பல வளர்ச்சிகளைக் காணவும், நலமுடன் சிறக்கவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்" என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்!