Published : 17 Feb 2020 11:31 AM
Last Updated : 17 Feb 2020 11:31 AM

கரோனா: சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பலில் கண்டெடுக்கப்பட்ட பூனை; அச்சத்தைப் போக்குக - வாசன்

சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பலில் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தையும், சந்தேகத்தையும் தமிழக அரசு போக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (பிப்.17) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் சென்னை துறைமுகத்துக்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில் உள்ள கூண்டில் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டதால் அதனை உடனடியாகத் திருப்பி அனுப்பக் கூடிய நடவடிக்கையை சென்னை துறைமுகம் மேற்கொள்ள வேண்டும்.

கரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்ற வேளையில் சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பலில் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல உணவுப் பொருட்கள் இருந்த கண்டெய்னரில் பாம்பு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி பூனை மற்றும் பாம்பு இருந்ததாக வரும் செய்தியால் மக்கள் அச்சப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த அச்சத்திற்கு இடம் இருக்கக்கூடாது.

அதாவது கப்பலில் பொம்மைகள் வைக்கப்படிருந்த கூண்டில் உயிருள்ள பூனை ஒன்று இருந்ததும், பாம்பு இருந்ததாகச் சொல்வதும் சந்தேகத்திற்கு வழிவகுக்கும். தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் தமிழக சுகாதாரத்துறை அதற்குண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், மத்திய அரசும் கரோனா வைரஸ் பாதிக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கத்தில் இருந்தும், அச்சத்திலும் இருந்தும் பொதுமக்கள் மீளும் வரையில் சீனாவில் இருந்து எப்பொருளையும், மனிதரையும், எந்த விலங்குகளையும் தரை, ஆகாயம் மற்றும் கடல் வழியாக அனுமதிக்காமல் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

சென்னை துறைமுக அதிகாரிகள் துறைமுக விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது முறையானது என்றாலும் கூட இன்றைய சூழலில் சீனாவில் இருந்து வரும் உயிருள்ள ஜீவன்களையும் மற்றும் உயிரற்ற எப்பொருளையும் அனுமதிக்காமல் இருப்பது மட்டுமல்லாமல் வெளிநாட்டுக் கப்பலைக் கண்காணித்து, அதில் உள்ள அனைத்தையும் சோதனை செய்த பிறகே இறக்குமதிக்கு அனுமதி செய்ய முடிவு செய்ய வேண்டும்.

மேலும், வெளிநாடுகளில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு ஏதேனும் கப்பல் வர இருந்தால் அந்நாட்டுடன் தொடர்பு கொண்டு கரோனோ வைரஸ் சம்பந்தமாக எந்தவித சந்தேகத்திற்கும், அச்சத்திற்கும் இடம் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்துகொண்டு அதன் பிறகே அனுமதி கொடுப்பதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்.

எனவே, தமிழகத் துறைமுகங்களுக்கு வெளிநாட்டில் இருந்து கடல்வழியாக வரும் கப்பல்களைச் சோதனை செய்த பிறகே அனுமதி செய்திடவும், கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும், சந்தேகமும் எழாத வண்ணம் தொடர் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தவறவிடாதீர்

அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மைக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக்க வேண்டும்: ராமதாஸ்

மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும்: வைகோ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x