

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புபடுத்தியதால் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் வாரம் இருமுறை வெளியாகும் இதழ் மீதும் அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸார், 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே, கடந்த ஜன.30-ம்தேதி சென்னை பெரியமேட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன், டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்
அதேபோல், கடந்த பிப்.9-ம் தேதி வெளியான வாரம் இருமுறை வெளியாகும் இதழ் கட்டுரையிலும், முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன என்று கூறப்பட்டி ருந்தது.
தயாநிதி மாறன் பேட்டி, வாரம் இருமுறை வெளியாகும் இதழின் கட்டுரை ஆகியவை அமைச்சரின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அவதூறாக அமைந்திருப்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டத்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அரசாணை வெளியீடு
இந்த பரிந்துரையை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, ஆளுநர் அனுமதியை பெற்று தயாநிதி மாறன் மற்றும் வாரம் இருமுறை வெளியாகும் இதழ் ஆசிரியர், நிருபர் மீது அவதூறு வழக்கு தொடர உத்தரவிட்டு அதற்கான அரசாணையை வெளி யிட்டுள்ளது.