மாநகர போக்குவரத்து கழகத்தில் ஊழியர் விருப்ப ஓய்வுக்கான நிபந்தனை தளர்வு: தொழிற்சங்கத்தினர் வரவேற்பு

மாநகர போக்குவரத்து கழகத்தில் ஊழியர் விருப்ப ஓய்வுக்கான நிபந்தனை தளர்வு: தொழிற்சங்கத்தினர் வரவேற்பு
Updated on
1 min read

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் விருப்பு ஓய்வு பெறுவதற்கான நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். போக்குவரத்து கழகங்களில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 3,000 முதல் 3,500 பேர் வரை ஓய்வு பெறுகின்றனர். இருப்பினும், காலிபணியிடங்களுக்கு ஏற்ப புதிய ஆட்களை நியமிப்பதில்லை என தொழிற்சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஒரு சில ஊழியர்கள், விருப்ப ஓய்வு பெற்று வேலையிலிருந்து விலகி வருகிறார்கள். உடல் நலத்தை காரணம் காட்டி சிலர் விருப்ப ஓய்வுபெறுகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களை பொருத்தவரையில் 50 வயது நிறைவு செய்திருப்பதுடன் 20 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் மட்டுமே விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு வந்தது.

இதில் மாற்றம் செய்து புதிய உத்தரவை மாநகர போக்குவரத்து கழகம் சமீபத்தில் பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மாநகர போக்குவரத்து ஊழியர்கள் 50 வயது நிறைவு மற்றும் 20 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் மட்டுமே விருப்ப ஓய்வை பெறலாம் என்ற நிபந்தனை இருந்தது வந்தது. தற்போது, இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கண்ட 2 நிபந்தனைகளில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால் போதுமானது. எனவே, 50 வயது பூர்த்தியாவனவர்கள் அல்லது 20 ஆண்டுகள் தகுதியான பணிக்காலம் முடித்தவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறும்போது, “உடல்நிலை பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தான் விருப்ப ஓய்வில் செல்ல விருப்பம் தெரிவிப்பார்கள். எனவே, விருப்ப ஓய்வு பெற 20 ஆண்டுகள் பணி மற்றும் 50 வயது பூர்த்தி செய்ய வேண்டுமென கட்டாய நிபந்தனைகள், விருப்ப ஓய்வு பெற நினைக்கும் ஊழியர்களுக்கு தடையாக இருந்தது. இந்நிலையில், தற்போது இந்த நிபந்தனையை தளர்த்தியுள்ளதை வரவேற்கிறோம். இதனால், விருப்ப ஓய்வு பெறுவோருக்கு பென்ஷன் வழங்குவதில் சிக்கல் இருக்க கூடாது.

அதேபோல், இந்த உத்தரவை நிர்வாகம் தவறாக பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக, மாற்றுப்பணி கேட்டு வரும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in