

தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களுக்கு அருகில் உள்ள 300 கிராம ஊராட்சிகள் மற்றும் பெரிய கிராம ஊராட்சிகளில் உள்ள திடக்கழிவுகளை மேலாண்மை செய்ய, சிறிய பசுமை உரம் தயாரிக்கும் மையங்களை ரூ.90 கோடி மதிப்பீட்டில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தமிழகத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நகர்ப்புறங்களுக்கு அருகில் உள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் பெரிய கிராம ஊராட்சிகளில் திடக்கழிவுகளைத் திறம்பட கையாளுவதற்கும், தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்தவும், சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவை முதற்கட்டமாக,ரூ.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரக வளர்ச்சிதுறையில் உள்ள பொறியாளர்களுக்கு, மறைமலைநகரில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை பயிற்சி மையத்தில் திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், குப்பை உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்தல், அபாயகரமான கழிவுகளை வகைப்படுத்துதல், மறுசுழற்சிக்குப் பயன்படாத குப்பையை தனியாக சேமித்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி தரப்பட்டது. அதேபோல் நகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரக்குடில் கருத்தாக்கம், செயலாக்கம், பராமரிப்பு பணிகள், மண்புழுஉரக்குடில் ஆகியவை குறித்தும்நேரிடையாக சென்று விளக்கப்பட்டது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
நாம் பயன்படுத்தி எறியும்கழிவுப் பொருட்கள் திடக்கழிவு,திரவக்கழிவு என வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் நீர், காற்று, பூமி உள்ளிட்டவை மாசுபடுகின்றன. இதனால் பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் நிலை ஏற்படுகிறது. திடக்கழிவுகளை மேலாண்மை செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ‘ஜீரோ வேஸ்டேஜ்’ என்ற இலக்கை நோக்கி நாம் செல்கிறோம்.
தமிழகத்தில் நகராட்சிப் பகுதி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் செயல்படும் பசுமை உரக் கிடங்குகளில் குப்பை மேலாண்மை திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் 124 நகராட்சி மற்றும் 11 மாநகராட்சிகளில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்வரவேற்பை அடுத்து வளர்ச்சியடைந்த கிராம ஊராட்சிகளில் இதே திட்டத்தை செயல்படுத்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல்கட்டமாக, 300 கிராம ஊராட்சிகளில் இந்தப் பசுமை உரக்கிடங்கு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பசுமை உரம் விவசாயிகள், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றார்.