

ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வரித் தள்ளுபடி தொகை ரூ.6 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக ஏற்றுமதியாளர்கள் போதிய பணப்புழக்கம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலால் கிடைத்துள்ள 15 சதவீத ஏற்றுமதி வாய்ப்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் அன்னிய செலாவணி வருவாயில் ஆடைகள் ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், அண்மைக் காலமாக ஆடை ஏற்றுமதியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக போதிய பணப்புழக்கமின்றி அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சரத் குமார் சரப் கூறியதாவது:
ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு அறிமுகப்படுத்திய மத்திய, மாநில வரி தள்ளுபடி திட்டம் கடந்த ஆண்டு முழுவதும் செயல்படுத்தப்படவில்லை. அதேபோல், இந்திய வணிக ஏற்றுமதி திட்டமும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களும் நிறுத்தப்பட்டதால், ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வரி தள்ளுபடி தொகையான ரூ.6 ஆயிரம் கோடி கிடைக்காமல் நிலுவையில் உள்ளது.
இதனால், ஆடை ஏற்றுமதியாளர்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். ஆடை ஏற்றுமதியாளர்களில் பெரும்பாலானவர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள். மேலும், அதிகளவு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாகவும் ஆடைகள் தயாரிப்பு துறை திகழ்கிறது. ஏற்கனவே, பல்வேறு காரணங்களால் ஆடை ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரித் தள்ளுபடி தொகையும் வழங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
வியட்நாம், கம்போடியா, மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் அதிகரித்து வரும் ஆடை ஏற்றுமதியால், இந்தியாவின் ஆடை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனா-அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் மற்றும் சீனாவில் பரவியுள்ள கரோனா வைரஸ் ஆகியவற்றால் இந்தியாவுக்கு ஆடை ஏற்றுமதி 15 சதவீதம் வளர்ச்சிஅடைய வாய்ப்புள்ளது. ஆனால், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக ஏற்றுமதியாளர்களுக்கு வழங்க வேண்டிய வரித் தள்ளுபடி தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாரு சரத் குமார் சரப் கூறினார்.