

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த 2019-ம் ஆண்டில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய 10 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். இதேபோல், ரயில்வே நிலையங்கள், விரைவு, மின்சார ரயில்களில் ரயில்வே விதிகளை மீறி செயல்பட்ட பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 95,674 பேரை கைது செய்து அவர்களுக்கு ரூ.3 கோடி 11 லட்சத்து 20 ஆயிரத்து 325 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரயில்வே டிக்கெட் முறைகேடுகளில் ஈடு பட்ட 336 ஏஜென்ட்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.4.77 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில்வே விதிகளை மீறி தண்டவாளத்தை கடந்து சென்ற 11,247 பேருக்கு ரூ.36.67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின் விதியை மீறி ரயில்களின் படிகளில் பயணம் செய்த 9,512 பேரிடம் ரூ.32.27 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் புகைப்பிடித்த 1742 பேரிடம் ரூ.1.79 லட்சமும், மேலும், அவசரகாலத்தில் மட்டுமின்றி உரிய காரணம் இன்றி அவசரகால சங்கிலியை பிடித்து இழுத்த 1,810 பேரிடம் ரூ.9.40 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரயில்களில் உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்த 4,02,760 பேரிடமிருந்து ரூ.16 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரத்து 509 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தவறிவிட்டு சென்ற செல்போன், கைக்கடிகாரம், நகை போன்ற 2391 பொருட்கள் கைப்பற்றப்பட்டு சம்பந்தப்பட்ட பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரயில்வேக்கு சொந்தமான சொத்துகளை திருடிச் சென்ற வழக்கில் 562 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.