Published : 17 Feb 2020 06:37 AM
Last Updated : 17 Feb 2020 06:37 AM

பண்ணை இயந்திரங்களை முழு அளவில் பயன்படுத்திய திருச்சி விவசாயிக்கு ‘முன்னோடி விவசாயி’ விருது

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில்,பண்ணை இயந்திரங்களை முழு அளவில் பயன்படுத்தியதற்காக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.இளங்கோவனுக்கு ‘முன்னோடி விவசாயி’ விருது வழங்கப்பட்டது.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் இயந்திரங்களுக்கான செயல்விளக்க விழா பிப்.14-ம் தேதி நடைபெற்றது. இதில் பண்ணை இயந்திரங்களை முழு அளவில் பயன்படுத்தியதற்காக திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள புளியஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஆர்.இளங்கோவனுக்கு ‘முன்னோடி விவசாயி’ விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார், வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் ஒய்.ஜி.பிரசாத், வேளாண் விரிவாக்க மைய இயக்குநர் மு.ஜவஹர்லால் ஆகியோர் இந்த விருதை வழங்கிப் பாராட்டினர்.

நிலக்கடலை, மரவள்ளிக்கிழங்கு, சின்ன வெங்காயம் ஆகிய பயிர்களின் சாகுபடியில் விதை விதைக்கும் கருவி முதல் அறுவடைவரை பண்ணை இயந்திரங்களைக் கொண்டு சாகுபடி பணிகளை முன்னோடி விவசாயி ஆர்.இளங்கோவன் மேற்கொண்டுள்ளார்.

இவற்றில் சுழல் கலப்பை, சட்டிக் கலப்பை, நிலம் சமன்படுத்தும் கருவிகள், கோனோவீடர் கருவிகள், சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம், சொட்டு நீர் பாசனத்தின் மூலம் உரமிடுதல், தெளிப்புநீர் பாசனத்தின் மூலம் உரம், பூச்சிக் கொல்லி மற்றும் பூஞ்சானக் கொல்லி மருத்துகள் தெளித்தல் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளார்.

மேலும், பயறுவகைகளில், துல்லிய விதை விதைக்கும் கருவி மூலம் விதைப்பு செய்து, அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்துள்ளார்.

வேளாண் இயந்திரங்களை முழு அளவில் பயன்படுத்தி சாகுபடிசெலவைக் குறைத்து வருமானத்தை 2 மடங்காக்கியதற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில், திருச்சி சிறுகமணியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் நூர்ஜகான்மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x