Published : 17 Feb 2020 06:30 AM
Last Updated : 17 Feb 2020 06:30 AM

மூன்றாண்டு கடந்து நான்காம் ஆண்டில் ஆட்சிப் பயணம்... மக்கள் நல திட்டங்களால் சாதனை படைத்த முதல்வர் பழனிசாமி

கடந்த பொங்கல் பண்டிகையன்று எடப்பாடி அருகே உள்ள தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் நெற்கதிர்களை அறுவடை செய்த முதல்வர்.

சென்னை

மாங்கனி மாவட்டமாம் சேலம் மாவட்டத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த பழனிசாமி, 2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தமிழகத்தின் 21-வது முதல்வராக பதவியேற்றார். அதிமுக பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல மாற்றங்கள், குழப்பங்கள் நிலவிய இக்கட்டான நேரத்தில்தான் முதல்வர் பதவியை ஏற்றார் பழனிசாமி. அதன்பின், தனது சாதுர்யமான நிர்வாகத்தால் ஆட்சியை தக்கவைத்ததுடன், பிரிந்து சென்ற ஓபிஎஸ் தரப்பையும் இணைத்து அதிமுக கட்சி, கொடி, இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுத்தார்.

அதிமுகவுக்குள் நிலவிய குழப்பங்களால் எத்தனை நாட்கள் இந்த ஆட்சி நீடிக்கும் என்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கூறிவந்த நிலையில், சோதனைகளை எல்லாம் வென்று, 3 ஆண்டுகளை கடந்து 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு.

ஜெயலலிதா வழியில் ஆட்சி

ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிய பழனிசாமி, அவர் கொண்டுவந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அத்துடன், பல புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி, மக்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். குறிப்பாக, குடிமராமத்து திட்டம், மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள், ரூ.1,000 பொங்கல் பரிசு, டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு என்பது போன்ற முதல்வரின் திட்டங்கள், மக்களை அவர் பக்கம் திரும்பச் செய்துள்ளது.

கடந்த 2015-ல் முதல் உலக முதலீட் டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்திய ஜெயலலிதா, ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கான முதலீடுகளை ஈர்த்தார். அதேவழியில், 2019 ஜனவரியில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தலைமையேற்று நடத்திய முதல்வர் பழனிசாமி, ரூ.3 லட்சத்து 431 கோடி அளவுக்கான முதலீடு தமிழகத்துக்கு வர வாய்ப்பு ஏற்படுத்தினார்.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, கடந்த 3 ஆண்டுகளில் 16,382 கோப்பு களில் கையெழுத்திட்டு, பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.

குடிமராமத்து

அரசின் தொடர் முயற்சிகளால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் இருந்த பெரிய ஏரிகள், சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார, குடிமராமத்து திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் இதுவரை ரூ.930 கோடியே 25 லட்சத்தில் 4,965 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விவசாயிகளின் 60 ஆண்டு கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் ரூ.1,652 கோடியில் நடந்து வருகின்றன. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து மீட்டெடுக்க ரூ.11,250 கோடியில், ‘நடந்தாய் வாழி காவேரி திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.22,096 கோடியில் 21,109 கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 8,524 கி.மீ. சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

சொகுசுப் பேருந்து

போக்குவரத்து கழகங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 4,921 புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சாதாரண மக்களும் அரசுப் பேருந்துகளில் சொகுசுப் பயணம் மேற்கொள்ளும் வகையில், தூங்கும் இருக்கை வசதியுடன் கூடிய 36 பேருந்துகள், படுக்கை வசதியுடன் கூடிய 106 குளிர்சாதன பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி ரூ.5,890 கோடியில் 12 ஆயிரம் புதிய பேருந்துகள், 2 ஆயிரம் புதிய மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவியர் இடை நிற்றலை தடுக்க ரூ.5,822 கோடியில் இலவச சீருடை, மடிக்கணினி உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கல்வி தொடர்பான அனைத்து தகவல் களையும் தெரிந்து கொண்டு மாணவர்கள் பயன்பெற அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

வேளாண் மண்டலம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டும், தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகள், ‘பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்’ ஆக மாற்றப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு 35 லட்சத்து 43 ஆயிரத்து 700 விவசாயிகளுக்கு ரூ.7,528 கோடிக்கு இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தடை

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 2.30 லட்சம் தனிநபர் குடியிருப்பு கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை மேம்படுத்தி, மாசற்ற தமிழகத்தை உருவாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி பயணம் மேற்கொண்டார். இதன்மூலம் ரூ.19,136 கோடியில் 83,837 புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் நலத்திட்டங்கள்

பயிர்க்கடனாக 34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.22,031 கோடியே 69 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் சூரிய மின்சக்தி வீடுகள் திட்டத்தில் ரூ.1,680 கோடியில் 80 ஆயிரம் வீடுகளும், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் ரூ.8,968 கோடியில் 5 லட்சத்து 27 ஆயிரம் வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் மூலம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 876 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து மக்கள் அச்சமின்றி வாழ 3.28 லட்சம் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விருதுகள்

தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ஊரக தூய்மைப் பணியில் மாநிலத்துக்கான விருது, பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்துக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை மத்திய அரசிடம் இருந்து தமிழகம் பெற்றுள்ளது. இதுபோன்ற பல மக்கள் நல திட்டங்களால் மகத்தான சாதனை படைத்துள்ளது முதல்வர் பழனிசாமியின் அரசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x