Published : 16 Feb 2020 17:42 pm

Updated : 16 Feb 2020 17:42 pm

 

Published : 16 Feb 2020 05:42 PM
Last Updated : 16 Feb 2020 05:42 PM

காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலம்:  இரட்டை வேடம் போடும் தமிழக அரசு: வேல்முருகன் கண்டனம்

velmurugan

சென்னை

காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிப்பதில் தமிழக முதல்வர் பழனிசாமி அரசு இரட்டை வேடம் போடுவதாக
தமிழக வாழ்வுரிமைக் கட்சி்த் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி்த் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:


வரலாற்றைத் திரிப்பதிலும் அறிவியலையே சிதைப்பதிலும் கைதேர்ந்தவர் நமது பிரதமர் மோடி. உதாரணத்திற்கு, புராண காலத்திலேயே ஏவுகணை, ராக்கெட், இன்டர்நெட் எல்லாமே இருந்தது என்று அவர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். தெரிந்தே செய்யும் இது, மக்களுக்கு திருநெல்வேலி அல்வாவே கொடுப்பதும் இரட்டை வேடம் போடுவதுமேயாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால் இந்தக் கலையில் மோடியையும் மிஞ்சியவர் தமிழக முதலமைச்சர் பழனிசாமிதான் என்றால் அதிலும் சந்தேகம் இருக்க முடியாது. அது எப்படி என்பதைப் பார்ப்போம். அண்மையில் பழனிசாமி சேலம் மாவட்டம் தலைவாசலில் வைத்துப் பேசும்போது, “தமிழக காவிரி டெல்டா பகுதி ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல’மாக அறிவிக்கப்படும்; அதற்கான ‘சட்ட நடவடிக்கை’யும் எடுக்கப்படும்” என்றார்.

உடனே நாம்கூட, ‘ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றால் அது எப்படி சாத்தியமாகும்’ என்று கேள்வி எழுப்பினோம். ஆனால் இதையெல்லாம் சட்டையே செய்யாத பழனிசாமி இப்போது ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று கடிதம் எழுதியதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

அந்தச் செய்தியைப் படித்தபோதுதான் அதில் செய்யப்பட்ட ஊடுவேலை’ தெரிந்தது. அதாவது தலைப்பில்தான் ‘ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும்’என்பதே தவிர, உள்ளே ‘ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டுவருவதைக் கைவிட வேண்டும்’ என்பதுதான் செய்தியின் சாரம்.

அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதை வைத்தே இந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் அவர், “எனது தலைமையில் அதிமுக எம்பிக்கள் மற்றும் அதிகாரிகள் குழு கடந்த 10ந் தேதி ஒன்றிய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி ஆகியோரை சந்தித்து முதலமைச்சரின் கடிதத்தைக் கொடுத்தோம்.

அதில் ‘ஏற்கனவே அங்கு ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் எண்ணெய், கியாஸ் ஆய்வு மற்றும் பிரித்தெடுக்கும் திட்டம் 1985ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதை மத்திய, மாநில முகமைகள் கண்காணித்து வருகின்றன. இதற்கு மேலும் ஏதாவது புதிய திட்டம் வந்தால் டெலா மண்டலத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

எனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதியில் ஹைரோகார்பன் ஆய்வு மற்றும் சுரங்கப் பணிகள் தொடர்பாக எதிர்காலத் திட்டம் வைத்திருந்தால் அதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். அதற்கேற்ற வகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதியை நீக்கும் ஷரத்தை சேர்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த செய்தியைப் படித்தபோது, இதுவரை அங்கு ஹைட்ரோகார்பன் திட்டம் இல்லாதது போலவும் இனிமேலும் வரக்கூடாது என்பதாகவும்தானே ஆகிறது? எப்படிப்பட்ட பச்சைப் பொய் இது!

2018இல் அமைச்சர் கருப்பண்ணன், “இங்கு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. ஆகவே மக்களிடம் கருத்துக் கேட்கவும் வேண்டாம், சுற்றுச்சூழல் அனுமதியும் பெற வேண்டாம்” என்று எழுதிய கடிதத்தின்படிதானே சம்பந்தப்பட்ட அந்த சட்டவிதிகளை ரத்து செய்துவிட்டு உடனடியாக வேதாந்தா கார்ப்பொரேட் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க நூற்றுக்கணக்கான கிணறுகளுக்கு அனுமதி அளித்தது ஒன்றிய அரசு!

மேலும், கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற முதல்வர் பழனிசாமி, கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals & Petrochemical Investment Region) அமைப்பதற்காக, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்தாரே!

ஏற்கனவே இதற்காக 2017 ஜூலை 19ந் தேதி அதிமுக அரசு வெளியிட்ட குறிப்பாணையில் (Notification) கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 45 கிராமங்களில் 22938 ஹெக்டேர் அதாவது சுமார் 57ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததே!

இவை மட்டுமா? ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்கவே மாட்டோம்’ என்று சட்டமன்றத்திலேயே சத்தியம் பண்ணாத குறையாக வாக்குறுதி அளித்ததே அதிமுக அரசு!

இவ்வளவையும் செய்துவிட்டுத்தான் ‘காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்க எதிர்காலத் திட்டம் வைத்திருந்தால் அதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்’ என்பதாகக் கடிதம். இது பச்சைப் பொய் மட்டுமல்ல; இரட்டை வேடம் போடுவதாகும், மக்களுக்கே அல்வா கொடுப்பதாகும்.

இப்படி இரட்டை வேடம் போட்டு மக்களுக்கு அல்வா கொடுப்பது கூட பழனிசாமி அரசுக்குப் புதிதல்ல. ஏற்கனவே ‘நீட்’ விடயத்தில் நடந்ததுதானே இது! ஒன்றிய அரசுக்கு சட்டமன்றத் தீர்மானம்தான் அனுப்பியிருக்கிறதே என்று சொல்லியேவந்து, கடைசியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்தானே தீர்மானத்தை எப்போதோ ஒன்றிய அரசு திருப்பி அனுப்பிவிட்ட உண்மை தெரியவந்தது!

அது மட்டுமா? குடியுரிமைத் திருத்த சட்ட (சிஏஏ) மசோதாவுக்கு ஆதரவாக தன்னோடு தன் சகா பாமகவையும் சேர்த்து மாநிலங்களவையில் வாக்களிக்கவைத்து அதைச் சட்டமாக்கி, இந்தியாவையே போராட்ட ரணகளமாக்கியிருக்கிற கட்சிதானே பழனிசாமியின் அதிமுக!

இதைச் செய்துவிட்டு, சிறுபான்மையருக்குப் பாதிப்பென்றால் முதல் ஆளாய் முன்னிற்போம் நாம் என்கிறது அதிமுக. ஆனால் சென்னை பழைய வண்ணார்பேட்டையில் ‘சிஏஏ எதிர்ப்பு தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்’ என்று கேட்டுப் போராடிய இஸ்லாமியர்களை, பெண்கள் மீதும் தடியடிப் பிரயோகம் செய்த அரசுதானே அதிமுக! இந்த மாதம் 28ந் தேதிவரை போராட்டத்திற்கு அனுமதியே கிடையாது என்று அறிக்கை செய்திருக்கிறதே சென்னை மாநகர் போலீஸ், அது ஏன்? இஸ்லாமியர்கள் போராடக் கூடாது என்றுதானே! இதையும் மீறி அங்கு என்ன தமிழ்நாடு முழுவதுமே சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் தொடர்கிறதே அதற்கென்ன சொல்லும் இந்த அரசு?

அதனால்தான் மக்களுக்கு அல்வா கொடுப்பதில், இரட்டை வேடம் போடுவதில் மோடியையும் மிஞ்சிய பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைVelmuruganகாவிரி டெல்டா பகுதிவேளாண் மண்டலம்இரட்டை வேடம் போடும் தமிழக அரசுவேல்முருகன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author