Published : 16 Feb 2020 05:28 PM
Last Updated : 16 Feb 2020 05:28 PM

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள 2.91 கிலோ கிராம் தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று இரவு கொழும்புவிலிருந்து ஏர் இண்டியா விமானம் மூலம் சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த ஃபாத்திமா (48) மற்றும் ஃபாத்திமா ஃபரீனா ரிஸ்வி (43) ஆகிய இரண்டு பெண்கள் மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீத் (34) மற்றும் ராசிக் அலி (31) ஆகிய இருவரையும் விமான நிலைய வெளியேறும் பகுதியில் வழிமறித்து சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.

இதில் அவர்கள், பசை வடிவிலான தங்கத்தை 11 பொட்டலங்களாக மலக்குடலில் மறைத்துவைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டு, 1.284 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்புவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வந்த சென்னையைச் சேர்ந்த நஸீர் அகமது(28), ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசுல் ரஹ்மான்(23) மற்றும் இலங்கையைச் சேர்ந்த யாசிர்(49) ஆகியோரை விமான நிலைய வெளியேறும் பகுதியில் வழிமறித்து சோதனையிட்டதில், அவர்கள், பசை வடிவிலான தங்கத்தை 12 பொட்டலங்களாக மலக்குடலில் மறைத்துவைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டு, 1.324 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

ஞாயிறன்று துபாயிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நூருல் ஹக்(39) என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையிலும், அவரது ஜீன்ஸ் பேண்டின் இடுப்புப் பகுதியில் பசைவடிவிலான தங்கத்தை மூன்று பட்டைகளாக மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டு, 303 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

மொத்தத்தில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள 2.91 கிலோகிராம் எடையுள்ள 24 கேரட் தூய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x