Published : 16 Feb 2020 05:19 PM
Last Updated : 16 Feb 2020 05:19 PM

குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம்: முத்தரசன் வலியுறுத்தல்

குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி போராட்டம் நடைபெறும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறுிக்கையில் கூறியுள்ளதாவது:

நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறவும், என்.ஆர்.சி.க்கு வழிகோலும் என்.பி.ஆர். தயாரிப்பதை நிறுத்தக் கோரியும், தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை நாடு முழுவதும் பதற்றத்தையும், அச்ச சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இதனை மத்திய அரசு உணர மறுக்கிறது.

மாணவர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், பெரும்பாலான அரசியல் கட்சிகள், சிறுபான்மை பிரிவினர் என பலரும் இச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்துகின்றனர். ஜனநாயக அழுத்தங்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க மறுக்கிறது. எனினும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பாண்டிச்சேரி என இன்னும் பல்வேறு மாநில அரசுகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற சட்டமன்றத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு நாளை கூட உள்ள கூட்டத் தொடரில் மத்திய அரசு தனது குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்ற முன்வரவேண்டுமென்று வலியுறுத்தும் வகையில் பிப்ரவரி 17 தொடங்கி 20 வரை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது. அரசை வலியுறுத்தும் வகையில் நடைபெறும் இப்போராட்டத்தில் சகல பகுதி ஜனநாயக சக்திகளும் பங்கேற்று போராட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x