

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3 வருடத்தை வெற்றிகரமாக கடந்து 4 ஆம் ஆண்டில் சிறப்போடு அடி எடுத்து வைப்பது தொடர் நல்லாட்சிக்கு வழி வகுக்கும் என்ற முழு நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று, சிறப்பாக செயல்பட்டு, வெற்றிகரமாக 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அடி எடுத்து வைப்பது வாழ்த்துக்குரியது, பாராட்டுக்குரியது. தமிழக முதல்வர் மறைந்த புரட்சித் தலைவி அவர்களுடைய வழியைப் பின்பற்றி, தடம் புரளாமல் அவர்கள் வழியில் ஆட்சியை நடத்துவது மட்டுமல்லாமல் திட்டங்களையும் அறிவித்து, செயல்படுத்திக்கொண்டிருக்கிறார். இதற்கு உறுதுணையாக செயல்படுகின்ற – தமிழக துணை முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் – இந்த தருணத்திலே வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
சாமானியராக, சாதாரண மக்களோடு பழகக்கூடியவர்களாக செயல்படுவதால் தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறார். அனைத்து துறைகளின் வளர்ச்சியை உறுதி செய்து கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதாவது விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழில் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தமிழக மக்களுக்கு நல்ல பயன் தருகிறது. குறிப்பாக தான் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக விவசாயம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதும், திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்துவதும், நிதி ஒதுக்கீடு செய்வதும் – 100 சதவீதம் பொருத்தமானது. ஏற்புடையதாக இருக்கிறது.
தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு முதல்வர் - வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீடுகளை ஈர்க்க மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது. அதனை நிரூபிக்கும் வகையிலே சேலம் மாவட்டத்தில் – தெற்காசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியதும், சியட் நிறுவனத்தின் டயர் தொழிற்சாலையை தொடங்கி வைத்ததும் அடுத்தக்கட்டமாக தொழில் தொடங்குவதற்கு அடித்தளமாக அமைந்துவிட்டது. டெல்டா பகுதி விவசாயத்தை காப்பாற்ற பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதற்குண்டான நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.
அரசுப் பள்ளிகள்– தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர நடவடிக்கைகளை மேற்கொண்டவர். அனைத்து மாவட்டங்களிலும் கண்டிப்பாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்பதற்காக புதியதாக மருத்துவக்கல்லூரிகள் அமைந்து வருவதற்கு வித்திட்டவர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, பாதுகாக்க சரியான நடவடிக்கைகளை தமிழக அ.தி.மு.க அரசு தொடர்ந்து எடுத்து வருவதையும் குறிப்பிடுகிறேன். மிக முக்கியமாக மாநில அரசு மத்திய அரசோடு இணக்கமாக செயல்பட்டு தமிழக உரிமையை விட்டுக்கொடுக்காமல் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டியதை கேட்டு பெறுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவது தனிச்சிறப்பு. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் 16,382 கோப்புகளில் கையெழுத்திட்டு, வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்ற பாடுபட்டிருப்பது பாராட்டத்தக்கது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு – அ.தி.மு.க. ஆட்சியின் நிலை என்ன என்று பலர் சந்தேகத்துக்குரிய கேள்வியை எழுப்பியதற்கு – விடை கொடுக்கும் வகையிலே நல்லாட்சி செய்து, வெற்றி கண்டு, கழகத்தில் அனைவரையும் அரவணைத்து, கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார். மேலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது பல துறைகளில் தமிழகம் முன்வரிசையில் அமரக்கூடிய தகுதி பெற்றதற்கும், வளமான தமிழகத்தை ஏற்படுத்துவதற்கும் கடின உழைப்பையும், தொடர் முயற்சியையும், சிறப்பான பணிகளையும் – அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டு வரும் தமிழக முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது, நன்றிக்குரியது.
மொத்தத்தில் – தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர், SC/ST, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், வியாபாரிகள், மகளிர், இளைஞர், மாணவர், முதியோர் என அனைத்து தரப்பினரின் நலனுக்காக பல்வேறு துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் தமிழக முதல்வர் அவர்களின் பணியானது – இந்த 4 ஆம் ஆண்டிலும் தொடரும் என்ற நம்பிக்கையை தமிழக முதல்வர் ஏற்படுத்தியிருக்கிறார்.
எனவே தமிழக வளர்ச்சிக்காக, தமிழக மக்கள் நலனுக்காக தமிழக முதல்வர் செய்து வரும் பணிகள் முதல்வர் அவர்கள் தலைமையிலே மென்மேலும் சிறக்க, வளர, தொடர தமாகா சார்பில் வாழ்த்துகிறேன்.’’ எனக் கூறியுள்ளார்.