

தமிழக நிதிநிலை அறிக்கையில் தொல்லியல் துறைக்கும், புதிய அகழ்வைப்பகம் அமைப்பதற்கும் ஒதுக்கீடு செய்யும் நிதி தொடர்பான முக்கிய அம்சம் இடம் பெற்றிருப்பதால் அதற்குண்டான பணியை தமிழக அரசு உடனடியாக தொடங்கி விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
2020 – 2021 ஆம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல்வேறு முக்கிய அம்சங்களில் தொல்லியல் துறைக்கும், கீழடி அகழ்வைப்பகம் அமைப்பதற்கும் ஒதுக்கும் நிதியானது தமிழினம், தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றின் பெருமையை, புகழை நிலைநாட்டவும், பண்டையத் தமிழக வரலாற்றுச் சிறப்புக்களை உலகளவில் பரப்புவதற்கும் பயன்படும்.
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் மூலம் சங்ககால மக்கள் வாழ்ந்த நகர நாகரீகத்தை தமிழர்கள் முழுமையாக தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கிறது. அதாவது தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள தமிழர்கள் ஏன் உலக நாடுகள் பலவற்றில் வாழும் தமிழர்களும் பண்டைய தமிழர் தம் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொண்டு பெருமை அடைவார்கள். இந்நிலையில் தமிழக நிதிநிலை அறிக்கையின் உரையில் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக உலகத்தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ்வைப்பகம் அமைத்திட 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக குறிப்பிடப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது.
குறிப்பாக தொல்லியல் துறைக்காக 31.93 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்திருப்பதன் மூலம் தமிழரின் பழமையை, தொன்மையை, பண்டையக் கால வரலாற்றை நாமெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஏற்ற இடமாக தமிழ்நாடு இருப்பதால் தமிழக தொல்லியல் துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதனை தமிழக அரசு நிறைவேற்றியிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் - கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு நாள் விழாவின் கூட்டத்தில் முதல்வர் அவர்கள் அறிவித்தார்கள். அதாவது கீழடியில் சுமார் 110 ஏக்கர் நிலப்பரப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தொன்மையான கட்டடங்களின் தரைத்தளங்கள், மதில் சுவர்கள், வடிகால்கள், சுடுமண் குழாய்கள், சதுரங்கக் காய்கள், மணிகள், வணிகர்களின் எடைக்கற்கள், நெசவுத் தொழிலுக்கான தக்கைகள் உள்ளிட்டவை கிடைத்தன.
இது போல் கிடைத்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்ட தமிழக அரசு நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மூலம் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கி.மு. 600 களில் கீழடியில் தமிழர் நாகரிகம் உச்சம் பெற்றிருந்தை உலகமே தெரிந்துகொண்டு வியக்கும். இந்நிலையில் கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
எனவே கீழடியில் தொல்பொருள் ஆய்வுகள் தொடர வேண்டும் என்றும், தொல்லியல் துறைக்காகவும், அகழ்வைப்பகம் அமைப்பதற்காகவும் ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்ட நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அதற்கான பணியை காலத்தே தொடங்கி, காலக்கெடுவிற்குள் முடித்து, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் த.மா.கா சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.