

சென்னைக்கு இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. பின்னர், நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
மக்களவையில் 25 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட தைக் கண்டித்து 7-ம் தேதி (இன்று) சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் அனுமதி அளித்துள்ளது. 7-ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு எனது தலைமையில் ஊர்வலமாகச் சென்று கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
மதுவுக்கு எதிரான போராட்டத் தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிர்த் தியாகம் செய்துள்ளார். அவரது தியாகத்துக்கு மதிப்பளித்து தமிழகத்தில் உடனடியாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும். நாடு முழுவதும் மதுவிலக்கு இல்லாமல் தமிழகத்தில் மட்டும் சாத்தியமல்ல என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து.
ஒரே நாளில் ஒரே ஆணையின் மூலம் மதுவிலக்கை கொண்டுவர முடியாது என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது. படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவர வேண் டும் என்பதே எங்களின் கோரிக்கை யாகும். இதைத்தான் குஷ்புவும் கூறியிருக்கிறார்.
மதுவிலக்கு போராட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மதுவுக்கு எதிராக கட்சிகள் ஒன்றிணைந்து போராடுவதை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. தேர்தல் கூட்டணி பற்றி பேச வேண்டிய நேரம் இதுவல்ல.
திமுகவுடன் இணைந்து போராடுவதில் தவறில்லை. நாங்கள் தனித்து போராடுகிறோம். மதிமுக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சிவசேனா கட்சிக்கு அனுமதி அளித்தது கண்டனத்துக்குரியது. மதுவைப் போலவே புகையிலையையும் ஒழிக்க வேண்டும். நானே சிகரெட் பிடிப்பவன். அதிலிருந்து விடுபட முயற்சித்து வருகிறேன்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.