Published : 16 Feb 2020 09:42 AM
Last Updated : 16 Feb 2020 09:42 AM

புற்றுநோயாளிகளின் நகரமாக மாறுகிறதா ஈரோடு? - முழுமையான ஆய்வு நடத்த அரசுக்கு கோரிக்கை

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் ஆய்வு மேற்கொண்டு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘புற்றுநோய் பாதிப்பில் ஈரோடு மாவட்டம், மாநில அளவில் 10-வது இடத்தில் உள்ளது. ஈரோடு கேன்சர் சென்டருக்கு நாள் ஒன்றுக்கு 150 புற்றுநோய் பாதிப்பு நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்’ என உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தன்று ஈரோட்டில் நடந்த கருத்தரங்கில், புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் கே.வேலவன், ஆர்.சுரேஷ்குமார், ஆர்.மகேந்திரன் தெரிவித்தனர். இந்த தகவல் ஈரோடு மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

காவிரி, பவானி ஆறுகள் ஓடும்ஈரோடு மாவட்டத்தில், சாய, சலவை, தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால்தான் ஈரோட்டில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகளை அணுகி உண்மைநிலையை அறியும் முயற்சியை ‘இந்து தமிழ்’ மேற்கொண்டது. அதன் விவரம்:

ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.மகேந்திரன் கூறியதாவது:

ஈரோட்டில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆண்களுக்கு வாய் புற்றுநோய், தொண்டை, வயிறு புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளது. சிலருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பும் உள்ளது. இதன் வீரியம் அதிகம் என்பதால், பலரும் மருத்துவமனைக்கு வராமலே மரணமடையும் நிலை தொடர்கிறது.

சாயக்கழிவுதான் காரணமா?

சாய, சலவை, தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளில் ரசாயனம் கலந்து இருக்கிறது. இவை நீரில் கலந்து, அவற்றை பயன்படுத்தும்போது புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இக்காரணத்தால்தான் புற்றுநோய் ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்த எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை.

என்னைப்பொறுத்தவரை புகையிலை, குடிப்பழக்கம்தான் 60 சதவீதம் புற்றுநோய் ஏற்படமுக்கியக் காரணமாக உள்ளது. இப்பழக்கத்தால் பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு, சுற்றுச்சூழலால் ஏற்படும் பாதிப்பு கூடுதல் காரணியாக அமைந்து புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றார்.

சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ள, தமிழக பசுமை இயக்கத்தின் தலைவர் மருத்துவர் வெ.ஜீவானந்தம் கூறும்போது, கடந்த 30 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டம் கடுமையாக மாசு அடைந்துள்ளது. இதனால், புற்றுநோய், குழந்தைப்பேறு இன்மை, ஆண்மைக்குறைவு போன்ற பாதிப்பு ஈரோட்டில் அதிகரித்து வருகிறது.

மருத்துவமனைகள் ஈரோட்டில் அதிகரித்துள்ளதே இதற்கு சாட்சி. சாயக்கழிவு மற்றும் தோல் தொழிற்சாலை கழிவு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, காற்று மாசு ஆகியவை புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்க காரணம். ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிடாமல் அரசு மறைக்கிறது, என்றார்.

கைவிரிக்கும் மாவட்ட நிர்வாகம்

ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு தொடர்பாக, ஈரோடுசுகாதாரத் துறை இணை இயக்குநர் கோமதி, துணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறும்போது, ‘‘புற்றுநோய் பாதிப்பு தொடர்பான புள்ளிவிவரம் எதுவும் எங்களிடம் இல்லை’’ என்றனர்.

ஒரு நிகழ்ச்சியில் ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் பேசும்போது, ‘‘டெங்கு விழிப்புணர்வு பணிக்காக நான் வீடு, வீடாக ஆய்வுக்கு சென்றபோது பத்து வீடுகளில் ஒரு வீட்டில் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான நோயாளி இருந்தார்’’ என்று குறிப்பிட்டார்.

அதேபோல், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசும்போது, ‘‘ஈரோடு நகர்பகுதியில் பணியில் உள்ள சில மருத்துவர்கள், புற்றுநோய் அச்சம் காரணமாக, நகரைவிட்டு வெளியில் தங்கி வருகின்றனர்’’ என்றும் குறிப்பிட்டார். மருத்துவர்களே புற்றுநோய் குறித்துஅச்சப்படும் சூழல் இருப்பதையே அவரது பேச்சு வெளிப்படுத்தியதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், புற்றுநோய் பாதிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது:

டெங்கு சம்பந்தமான ஆய்வுக்குச் சென்றபோது 10 வீடுகளில் ஒரு வீட்டில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர் இருந்தார் என்று நான் குறிப்பிட்டது உண்மைதான். தோல் தொழிற்சாலை கழிவு காரணமாக புற்றுநோய் ஏற்படுவதாக கூறுகிறார்கள். ஆனால், அவற்றை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x