

தமிழக ஊராட்சிகளில் நிதி இல்லாததால், உற்சாகமாக பதவியேற்ற ஊராட்சித் தலைவர்கள் கிராமங்களில் அடிப்படை பிரச்சினைகளைகூட சரிசெய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால், உள்ளாட்சிகளுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்திவிட்டது.
மேலும் மாநில அரசும் குறைவான நிதியே ஒதுக்கி வருகிறது. ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, மின் கட்டணம் போன்ற அடிப்படை வசதிகளுக்காக மாநில நிதிக்குழு மானியம் ஒதுக்குகிறது.
இந்த நிதி ஊராட்சிகளின் மக்கள்தொகை அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. நகர் பகுதிகளையொட்டி உள்ள ஊராட்சிகளில் மக்கள் தொகை அதிகம் இருப்பதால், அந்த ஊராட்சிகளுக்கு சில லட்ச ரூபாய் வரையும், மக்கள் தொகை குறைந்த ஊராட்சிகளுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவும் நிதி ஒதுக்குகின்றனர்.
மேலும் மத்திய அரசு ஒதுக்கிய 14-வது நிதிக்குழு மானியம் முழுவதும் குப்பைத் தொட்டிகள், வண்டிகள் வாங்கியதற்காக செலவழிக்கப்பட்டன. இதனால் பெரும்பாலான ஊராட்சிகளில் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான நிதியே கையிருப்பில் உள்ளது.
நிதி இல்லாததால் சமீபத்தில் உற்சாகமாகப் பொறுப்பேற்ற ஊராட்சித் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் கிராமங்களில் அடிப்படை பிரச்சினைகளைகூட தீர்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் சிலர் கூறும்போது, "மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கத்தான் எங்களைத் தேர்வு செய்தனர். ஆனால் ஊராட்சியில் நிதிஇல்லாததால் குடிநீர் பிரச்சினையைகூட தீர்க்க முடியாமல் தவிக்கிறோம். தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி ஊராட்சிகளை காப்பாற்ற வேண்டும்" என்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘பட்ஜெட்டுக்குப் பிறகுதான் கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்புள்ளது’ என்றார்.