

நாடு முழுவதும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1.5 லட்சம் கோடி மானியத்தை தராமல் ஏமாற்றியுள்ளதாக மத்திய அரசு மீது முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மத்திய அரசின் பட்ஜெட்-2020 குறித்த பகுப்பாய்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
மின்சாரம், தொழில், சுரங்கம், எண்ணெய் சுத்திகரிப்பு, நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளின் வளர்ச்சி பின்தங்கி இருப்பதே, இந்திய பொருளாதாரம் சிதைந்து போனதற்கு முக்கிய காரணம்.
கடன்தான் பொருளாதாரத்தை தூக்கி சுமக்கக் கூடியது. எனவே, சிறுதொழில் தொடங்கி பெரிய நிறுவனங்கள் வரை வங்கிகள் கடன் கொடுக்க வேண்டும். ஆனால்,2014-19 வரையிலான 5 ஆண்டுகளில் வேளாண் துறைக்கு கொடுத்த கடனின் வளர்ச்சி ஆண்டுக்கு 18.3 சதவீதமாக இருந்தது, இப்போது 5.3 சதவீதமாக குறைந்துவிட்டது. சிறு, குறு தொழில்களுக்கு 6.7 சதவீதமாக இருந்தது, இப்போது 1.6 சதவீதமாக குறைந்துவிட்டது. கல்விக்கடன் மைனஸ் 6.5 சதவீதமாகிவிட்டது. கடன் இல்லாததால் அனைத்து தொழில்களும் முடங்கிவிட்டன. வீட்டுக்கடன், வாகனக் கடன் மட்டும் ஓரளவுக்கு தரப்படுகிறது.
அணு மின் நிலையங்கள் மூலம் பல ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான ஆலைகளை நிறுவிவிட்டோம். ஆனால், இவற்றில் 55 சதவீதம் மட்டுமே தற்போது செயல்படுகிறது. தொழில் நிறுவனங்கள் முடங்கிவிட்டதால், மின்சாரத்தின் தேவை குறைந்துவிட்டது. தேவை குறைந்ததால், உற்பத்தியும் குறைந்துவிட்டது. இது, இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் பின்னடைவை தரக்கூடியது.
கடந்த 6 மாதங்களாக ஏற்றுமதியின் வளர்ச்சியும், 8 மாதங்களாக இறக்குமதியின் வளர்ச்சியும் குறைந்துகொண்டிருக்கிறது. நிதி ஒதுக்கீடு செய்வதில் மாநில அரசுகளை ஏமாற்றி வருகின்றனர். நடப்பாண்டில் மட்டும் மாநிலங்களுக்கு தர வேண்டிய ரூ.1.5 லட்சம் கோடி மானியத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர். தமிழ்நாட்டுக்குக்கூட ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் கொடுக்கப்படாமல் உள்ளதாக கூறுகின்றனர்.
இப்படி கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளதாகவும், சராசரியாக குடும்பத்தினரின் நுகர்வு 3.7 சதவீதம் குறைந்திருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த ஆட்சியில் பல கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே கொண்டு வரப்பட்டுள்ளதை உணர முடிகிறது.
அரசு நடத்த அவசியம் இல்லை
தனியாரின் போட்டியை சமாளிக்க பிஎஸ்என்எல், ஏர் இந்தியா உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் துணிவுடனும், துரிதமாகவும் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், தற்போது அந்த சூழ்நிலை இல்லை. அத்துடன், சில பொதுத் துறை நிறுவனங்களை அரசுதான் நடத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்றார்.