Published : 16 Feb 2020 09:37 AM
Last Updated : 16 Feb 2020 09:37 AM

திருவண்ணாமலை மாவட்ட திமுக பொறுப்பாளராக தரணிவேந்தன் நியமனம்: மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து சிவானந்தம் நீக்கம்

சென்னை/திருவண்ணாமலை

திருவண்ணாமலை திமுக வடக்கு மாவட்டத்துக்கு புதிய பொறுப்பாளராக எம்.எஸ்.தரணிவேந்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

திமுகவில் உட்கட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டு, புதிய நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே, திருச்சி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும் மாற்றப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆர்.சிவானந்தம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதில்எம்.எஸ்.தரணிவேந்தன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கெனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திமுக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவானந்தம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். 2014-ல் நடைபெற்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். நடந்து முடிந்தகிராம உள்ளாட்சித் தேர்தலிலும் சிவானந்தம் சரிவர செயல்படவில்லை என உட்கட்சிக்குள் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையில், தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற பல கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி தரவில்லை என கூறி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிவானந்தத்திடம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த வாரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர், திமுக பொருளாளர் துரைமுருகனுடன் இணைந்து, எ.வ.வேலுக்கு எதிராக செயல்பட்டதாக புகார் கூறப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை திமுக தலைமையின் கவனத்துக்கு எ.வ.வேலு கொண்டுசென்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் எதிரொலியாகவே சிவானந்தம் நீக்கப்பட்டு, எ.வ.வேலு ஆதரவாளரான எம்எஸ் தரணிவேந்தன் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x