

இடஒதுக்கீட்டுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள இக்ஷா மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தலைமை வகித்தார். இதில், மாநில பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன், செயல் தலைவர் பொ.லிங்கம், மாநில பொருளாளர் கே.சுப்பிரமணி, மாநில செயலாளர்கள் கீசு.குமார், எஸ்.கே.சிவா, அஷரப் அலி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், “ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான சிறப்புக்கூறு நிதியை அந்த மக்களின் நலனுக்காக மட்டுமே மாநில அரசு செலவிட வேண்டும், ஆதிதிராவிட மக்களுக்கு தொழில் தொடங்கிட வங்கிக்கடன் எளிதில்கிடைப்பதற்கு வழிகாண வேண்டும், எஸ்.சி, எஸ்.டி, இடஒதுக்கீட்டுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும், கவுரவ கொலைகளை தடுக்க தனிச் சட்டம் உருவாக்க வேண்டும், குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்” ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உத்தராகண்ட் மாநில அரசு கடந்த 2012-ம் ஆண்டில் எஸ்.சி, எஸ்.டி, மக்களுக்கு இடஒதுக்கீடு செய்யாமல் ஊழியர்களை நியமனம் செய்தது. மாநில அரசின் முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இடஒதுக்கீடு இல்லாமல் வேலை நியமனம் செய்ததை ரத்துசெய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அம் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையில்லை, மாநில அரசுகள் இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்ற வேண்டியதில்லை என கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த தீர்ப்பு ஆபத்தானது. எனவே, மத்திய அரசு இந்த தீர்ப்பை ரத்து செய்ய அவசர சட்டம் பிறப்பித்து இடஒதுக்கீடு உரிமையை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.