Published : 16 Feb 2020 08:30 AM
Last Updated : 16 Feb 2020 08:30 AM

ஆட்சியாளர்கள் திருக்குறள் அறிவது நல்லது: கவிஞர் வைரமுத்து அறிவுறுத்தல்

சென்னையில் நடைபெற்ற திருக்குறள் விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி,வழக்கறிஞர் நளினி சிதம்பரம், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, பாடகி மகதி உள்ளிட்டோர்.படம்: க.பரத்

சென்னை

குடியுரிமை சட்டம் குறித்து திருவள்ளுவர் மறைமுகமாகக் கூறியிருப்பதால், ஆட்சியாளர்கள் திருக்குறள் அறிவது நல்லது என்று கவிஞர் வைரமுத்து அறிவுறுத்தினார்.

வெற்றித் தமிழர் பேரவையின் மகளிர் அணி சார்பில் திருவள்ளுவர் திருவிழா சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நேற்றுநடைபெற்றது. இதில், வைரமுத்து கலந்துகொண்டு பரிசுகள் வழங்கிப் பேசியதாவது:

திருக்குறள் மனிதத்தைச் சார்ந்திருக்கிறதே தவிர எந்த மதத்தையும் சார்ந்திருக்கவில்லை. உலகப் பொதுமறையாய் உயர்ந்து நிற்கும் அதன் பெருமையும் அதுதான், உலகின் விளிம்புவரை சென்று சேராத அதன் சிறுமையும் அதுதான்.

மனித குலத்தின் வாழ்வியல் போக்குவரத்துக்கு வழிவகுத்துக் கொடுத்த திருக்குறள் பாடப்புத்தகமாக ஒதுக்கப்பட்டதே தவிர வாழ்க்கைச் சட்டமாகவில்லை. திருக்குறளின் பெருங்கூறுகள் அன்றாட வாழ்வின் நெறிகளாகக் கொண்டாடப்பட வேண்டும். எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய திருக்குறளில்,இன்று உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கான தீர்வும் சொல்லப்பட்டிருக்கிறது. "நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்கிறார் திருவள்ளுவர். ஒருநோயின் ஆதிமூலம் அறிந்து மருத்துவம் செய்ய வேண்டும் என்கிறார். கிருமி வந்தபிறகும் எந்தப் பிராணி உயிரோடு இருக்கிறதோ அதன் எதிர்ப்பாற்றல் எதில் நிலைபெறுகிறதோ அதிலிருந்து மருந்து கண்டுபிடிக்க முடியும் என்கிறது இக்குறள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக்கூட வள்ளுவர் நேரடியாகச் சொல்லாமல், மறைமுகமாக சொல்லியிருக்கிறார். மயிலிறகு போன்ற பொருளைக்கூட அளவுக்கு மீறி ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும். அதுபோல யாருக்கும் அழுத்தம் கொடுப்பதாக சட்டம் இருக்கக்கூடாது. எனவே, ஆட்சியாளர்கள் திருக்குறள் அறிவது நல்லது. அந்த திருக்குறளைப் பரப்புவதே எங்களது வாழ்நாள் லட்சியம். இவ்வாறு பேசினார்.

தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., பேராசிரியை பர்வீன் சுல்தானா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வெற்றித் தமிழர் பேரவைபொதுச் செயலாளர் சாந்தி தணிகாசலம், உறுப்பினர் பானுமதி மனோகர், பேராசிரியைவிமலா அண்ணாதுரை, அனுகிரகா ஆதிபகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x